தேசிய ஒற்றுமை நாள்
உறுதிமொழி ஏற்பு
ஈரோடு, நவ. 1-
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி மற்றும் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழியை, நேற்று ஏற்றனர். முன்னதாக தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தை டி.ஆர்.ஓ., துவக்கி வைத்தார்.
இதில் செங்குந்தர் அரசு பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, சி.எஸ்.ஐ., அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
லஞ்சம் - ஊழல் ஒழிப்பு
குறித்து விழிப்புணர்வு
ஈரோடு, நவ. 1-
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, ஈரோடு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், லஞ்சம், ஊழலை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ப.செ.பார்க், ஸ்வஸ்திக் கார்னர் பகுதிகளில் கல்லுாரி மாணவர், மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நேற்று விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ராஜேஸ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பங்கேற்றனர். பின், லஞ்ச ஒழிப்பு பிரிவு அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனர். மாலையில் திண்டல் வேளாளர் மகளிர் கல்லுாரியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி இன்று முதல், ௪ம் தேதி வரை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் 0424-2210898, 94981-05694, 83000-36081, 94981-05922 என்ற எண்களில் தொடர்பு கொள்ள, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
படத்துக்கு வரி விலக்கு
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சூரியபிரகாஷ் தலைமை வகித்தார். கமிஷனர் வெங்கடேஷ்வரன், துணைத் தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த, இரவின் நிழல் திரைப்படத்துக்கு, வரிவிலக்கு அளிப்பது உள்பட, 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாளை குறைதீர் கூட்டம்
காங்கேயம்: காங்கேயம் கோட்ட மாதாந்திர மின் பயனீட்டாளர் குறை தீர் கூட்டம், காங்கேயத்தில், சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், நாளை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணிவரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிக்கிறார். மின் பயனீட்டாளர்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற, செயற்பொறியாளர் கணேஷ், வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உறுதிமொழி ஏற்பு
காங்கேயம்: காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி, நேற்று எடுக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் நசீம்ஜான் தலைமை வகித்தார். இந்திய நாட்டின் ஒற்றுமை, நேர்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை காப்பாற்ற, நான் என்னை அர்ப்பணித்து கொள்வேன் என, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு மனித சங்கிலி
தாராபுரம்: தேசிய ஒற்றுமை தினத்தை ஒட்டி, தாராபுரம் அரபிந்தோ வித்யாலயா பள்ளி மாணவர்கள், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில், நேற்று மனித சங்கிலியாக நின்று, நெகிழியை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், 317 மாணவர்கள், 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நீர்த்தேக்க தொட்டி திறப்பு
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி, 19வது வார்டு பகுதியில் அமைக்கப்பட்ட, ஆழ்துளை கிணற்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நேற்று திறந்து வைத்தார். நிகழ்வில் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர தி.மு.க., செயலாளர் முருகானந்தம், வார்டு கவுன்சிலர் புனிதா சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலுமணி நகர் சண்முகருக்கு
வெள்ளிக்கவச உடை உபயம்
கோபி, நவ. 1-
கோபி வேலுமணி நகரில், பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் சண்முகருக்கான கோவில் உள்ளது.
கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, நேற்று முன்தினம் மகா குமாரயாகம், சத்ரு சம்ஹார யாகம், சூரசம்ஹாரம் நடந்தது. மாலையில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதையடுத்து கோபி நகராட்சி, 11வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் முத்துரமணன், ஆறு கிலோ எடை கொண்ட, வெள்ளிக்கவசத்தை சண்முகருக்கு உபயம் செய்தார். விழாவில் கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
தெருநாய்களால் பாதிப்பு
மாநகர அலுவலர் உறுதி
ஈரோடு, நவ. 1-
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், கவுன்சிலர்கள் குரல் எழுப்பினர்.
பதிலளித்த மாநகர நல அலுவலர் பிரகாஷ், ''தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில், அவற்றுக்கு கருத்தடை மேற்கொள்ள, என்.ஜி.ஓ-., உதவியை நாட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவர்கள் வராவிட்டால், மாநகராட்சியே முடிவு எடுக்கும்,'' என்றார்.
குடிநீர் குழாய், ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பாதாள சாக்கடை மேல் மூடி உடைந்துள்ளதை கண்டறிந்து, சரி செய்யப்படும் என, மேயர் நாகரத்தினம் உறுதியளித்தார்.
நிலுவை மனுக்களுக்கு
தீர்வு காண உத்தரவு
ஈரோடு, நவ. 1-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தலைமையில் நடந்தது. முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 262 மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா, அனைத்து துறை அதிகாரிகளிடம் பேசுகையில், ''மாவட்டத்தில் பெறப்பட்ட, 42 மனுக்கள், ஆறு மாதத்துக்கு மேலும், 139 மனுக்கள், மூன்று மாதத்துக்கு மேலும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அவற்றை விரைவில் விசாரித்து தீர்வு காண வேண்டும்,'' என்றார்.