ஏலச்சீட்டு எடுத்தவர்கள்
பணம் தராததால் விபரீதம்
சேலம்: சேலம், டவுன் ஜலால்புறாவை சேர்ந்தவர் ராஜேந்திரன், 64; இவர், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். சீட்டு எடுத்தவர்கள், அதற்கான மாத தவணையை சரியாக செலுத்தவில்லை. சீட்டு எடுத்த சிலருக்கு பணத்தை இவரால் வழங்க முடியவில்லை. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது மனைவி யுவராணி, 60, மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், வரும் வழியிலேயே, ராஜேந்தினர் இறந்து விட்டார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்டக்டர், டிரைவர் மீது
தாக்கு: 2 பேர் கைது
ஓமலுார்: ஓமலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு,
ஓமலுார்-இளம்பிள்ளை செல்லும் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. அதில், கண்டக்டர் முத்து
மாணிக்கம், 50, டிரைவர் செம்பன், 52, ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, போதையிலிருந்து, 2 வாலிபர்கள் தகராறில் ஈடுபட்டு, கண்டக்டர், டிரைவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து புகார்படி, ஓமலுார் போலீசார், செம்மாண்டப்பட்டியை சேர்ந்த பூபதி, 23, சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன், 24, ஆகிய இருவரை, நேற்று கைது செய்தனர்.
திருப்பூரில் மாயமானவர்
சேலத்தில் மீட்டு ஒப்படைப்பு
சேலம்: திருப்பூர் மாவட்டம், காட்டுப்பாளையத்தை சேர்ந்த துரைபாண்டியன் மகன் அர்ஜூன் பிரகாஷ், 27; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த, 30ல் மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் அளித்த புகார்படி, திருப்பூர் போலீசார், அனைத்து மாவட்ட, மாநகர போலீசாருக்கும் தெரிவித்து தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில் அருகே நடந்து வந்த அர்ஜூன் பிரகாைஷ, அன்னதானப்பட்டி போலீசார் மீட்டு, திருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவரது பெற்றோர், திருப்பூர் போலீசாருடன் சேலம் வந்த நிலையில், அவர்களிடம் மனநலம் பாதித்த வாலிபரை அன்னதானப்பட்டி போலீசார் ஒப்படைத்தனர்.
போதையில் நீரில் மூழ்கிய வாலிபர்
தாரமங்கலம்: தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சி, கே.கே.நகர், கஞ்சமலைபுதுார் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சுப்ரமணி, 44; கூலித்தொழிலாளி. இவரது நண்பர் மோகன்குமார், 34; இருவரும் மதுகுடித்துவிட்டு, கொழந்தாம்பட்டி ஏரி பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு போதை தலைக்கேறிய நிலையில், சுப்பிரமணி ஏரியின் ஒருகரையிலிருந்து மறுகரைக்கு செல்வதாக கூறி, நீரில் இறங்கி மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து, மோகன்குமார், தாரமங்கலம் போலீசார் மற்றும் ஓமலுார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்த அவர்கள், சுப்பிரமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
3 மாடுகள் இறப்பு
போலீசார் விசாரணை
காடையாம்பட்டி: ஓமலுார் அருகே, செம்மாண்டப்பட்டியில், பழைய ஏனாதி காலனியை சேர்ந்த கண்ணன் மனைவி மாதம்மாள், 37; இவர், 3 மாடுகளை வளர்த்து வந்தார். பெரியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, மாதவன், 40, என்பவரது நிலத்தில், நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. மாலை, 5:00 மணியளவில், மூன்று மாடுகளும் இறந்து கிடந்தன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன், மாதவன் தனது விவசாய நிலத்தில், மாடுகள் மேய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாடுகள் இறப்புக்கு, மாதவன் காரணம் என, ஓமலுார் போலீசில் மாதம்மாள் நேற்று இரவு புகாரளித்தார். ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரேத பரிசோதனைக்கு பின், இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு துாண்டிய
காதலன் சிறையிலடைப்பு
ஜலகண்டாபுரம்: தாரமங்கலம் அருகே, செலவடை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி, 50; கூலித்தொழிலாளி. இரண்டாவது மகள் நந்தினி, 23; பி.எஸ்சி., படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டிலிருந்துள்ளார். இவர், அரியாம்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளி வசந்த், 25, என்ற வாலிபரை காதலித்துள்ளார். வசந்த் திருமணத்துக்கு மறுத்ததையடுத்து, தீபாவளியன்று, கிணற்றில் குதித்து நந்தினி தற்கொலை செய்து கொண்டார். மகள் இறப்புக்கு காரணமான வசந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, லட்சுமி, ஜலகண்டாபுரம் போலீசில் புகாரளித்தார். அதன்படி, வசந்தை கைது செய்து, சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.
வேனில் மது கடத்தல்
இரண்டு பேர் கைது
பெத்தநாயக்கன்பாளையம்: சேலம், பெத்த
நாயக்கன்பாளையம் அருகே, தும்பல் கிராமத்தில், நேற்று, ஏத்தாப்பூர் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த, 'மகேந்திரா' சரக்கு வாகனத்தை ஆய்வு செய்தனர். அதில், 408 மதுபாட்டில்களை, கருமந்துறை பகுதிக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, சரக்கு வேனை பறிமுதல் செய்து, குன்னுாரை சேர்ந்த டிரைவர் மணி, 28, கல்லேரிப்பட்டி ஆண்டி மகன் பழனிசாமி, 39, ஆகியோரை, ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்தனர்.
ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்
சக பயணிக்கு 3 ஆண்டு சிறை
சேலம்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு, கோவில் பதகை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன், 45; இவர் கடந்த, 2018, நவ., 9ல், சேரன் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் பயணம் செய்துள்ளார். இரவு, 12:30 மணியளவில், சேலம் அருகே ரயில் வந்த போது, அதே பெட்டியில் பயணித்த, 16 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில்
ஈடுபட்டுள்ளார்.
சேலம் ரயில்வே போலீசில், சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, மகேஷ்வரன் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், 3 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
சாட்சியை மிரட்டிய ரவுடிக்கு காப்பு
வாழப்பாடி, நவ. 1--
வாழப்பாடி அடுத்த, அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 51; இவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது கொலை வழக்கில் சாட்சியாக உள்ளார். அதனால், ரவுடி கும்பல், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக கூறி, வாழப்பாடி போலீசில் புகாரளித்தார். குள்ளம்பட்டியை சேர்ந்த கண்ணன், 37, என்ற ரவுடியை, கைது செய்து, சேலம் சிறையிலடைத்தனர்.
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி
இலங்கை தமிழருக்கு கிடைக்குமா?
சேலம்: சித்தர் கோவில், இலங்கை மறுவாழ்வு முகாமை சேர்ந்த, 15க்கும் மேற்பட்டோர், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று, வழங்கிய மனுவில், 'கரிச்சிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 5 சவரனுக்கும் குறைவான நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். ஆனால், கடன் தள்ளுபடி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து, சேலம் சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தில், பலமுறை மனு அளித்தும், முறையிட்டும், நடவடிக்கை இல்லை. எங்களுக்கும், கடன்தள்ளுபடி செய்து, அடகு நகையை திருப்பி வழங்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றுவதில்
பாரபட்சம்: தாசில்தார் மீது புகார்
சேலம்: இடைப்பாடி அடுத்த குரும்பப்பட்டி, கூச்சுக்கல்காட்டை சேர்ந்தவர் செல்வி, 40; இவர், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு: ஓடை புறம்போக்கு, கோடி வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட, 40 வீடுகளை அகற்ற, 2017ல், இடைப்பாடி தாசில்தார் நோட்டீஸ் வழங்கினார். அதன்படி, என் வீடு மட்டும் இடித்து அகற்றப்பட்டது. மீதமுள்ள வீடுகள் அகற்றப்படவில்லை. அதோடு, அவர்களுக்கு தங்காயூர் கிராமம், கோணமோரியில் மாற்று இடத்துக்கான பட்டா வழங்கப்பட்டது. அதில், எனக்கு தாழ்வான பகுதியை ஒதுக்கீடு செய்துள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பை அகற்றாததால், வீட்டை விஸ்தரிப்பு செய்து கட்டிவருவது குறித்து, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினேன். இது தொடர்பாக, தாசில்தார் விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார். இது தொடர்பாக, விசாரணை நடத்துவதோடு, எனக்கு வேறொரு இடத்தில், பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டேல் பிறந்தநாள்: ஒற்றுமை ஓட்டம்
சேலம்: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி, நேற்று, காந்தி விளையாட்டு மைதானத்தில், ஒற்றுமை ஓட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து, ஒற்றுமை ஒட்டத்தை தொடங்கி வைத்தார். பெரியார் மேம்பாலம், நான்கு ரோடு, அண்ணாபூங்கா வழியாக வந்த ஓட்டம், மீண்டும், காந்தி மைதானத்தை அடைந்தது. தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமைநாள் உறுதி மொழி மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க, அதை, அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஊராட்சி அலுவலகத்தை
தொழிலாளர்கள் முற்றுகை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி, வார்டு உறுப்பினர்
சங்கீதா தலைமையில், பெண் தொழிலாளர்கள், ஒன்றிய அலுவலகத்துக்கு, நேற்று வந்தனர். அங்கு அவர்கள், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஓராண்டாக வேலை வழங்கவில்லை. ஓடை வேலை இல்லை. விவசாயம் சார்ந்த பணிகள் மட்டுமே செய்ய வேண்டும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், மண் மற்றும் கல் கரை கட்டும் விவசாயிகள், அவர்களின் உறவினர் தொழிலாளர்களை வைத்தே கட்டுகின்றனர். மற்ற தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. கசிவுநீர் குட்டை, பண்ணை குட்டை அமைக்கும் பணி வழங்க வேண்டும். வேலை வழங்கவில்லை என்றால், கலெக்டர் அலுவலகத்தில், வேலைக்கான அடையாள அட்டையை ஒப்படைத்து விடுவோம்'
என்றனர்.
விழிப்புணர்வு பேச்சுப்போட்டி
60 மாணவர்கள் பங்கேற்பு
சேலம்: சேலம், சனாதன தர்ம வித்யா பீடம் சார்பில், நீராதாரம் பேண விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, குண்டு போடும் தெருவில் உள்ள கமலா மண்டபத்தில், நேற்று நடந்தது. இதற்கு, பீடத்தின் செயலர் சந்திரசேகர் தலைமை வகித்தார். தொடர்ந்து, 8ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'நடந்தாய் வழி காவேரி' என்ற தலைப்பிலும், கல்லுாரி மாணவர்களுக்கு, 'நதிகளை காக்க அவை நம்மை காக்கும்' என்ற தலைப்பிலும் பேச்சுப்போட்டி நடந்தது. பள்ளி, கல்லுாரியை சேர்ந்த, 60 மாணவ, மாணவியர் பங்கேற்று பேசினர். முடிவில், பேச்சு திறன் அடிப்படையில் பள்ளியை சேர்ந்த, 10 பேர், கல்லுாரியை சேர்ந்த, 5 பேர் என, 15 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காவிரி விழிப்புணர்வு
ரத யாத்திரைக்கு வரவேற்பு
சேலம்: அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில், காவிரி விழிப்புணர்வு தீர்த்த ரத யாத்திரை, நேற்று காலை, நான்கு ரோடு அருகே உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு வந்தது. அங்கு காவிரி அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் டவுன் வாசவி சுபிக் ஷா ஹாலில் ரத யாத்திரைக்கு வரவேற்பு நடந்தது.
இன்று மதியம், 12:00 மணிக்கு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, வித்யா விகாஸ் கல்வி நிறுவனம், மாலை, 3:00 மணிக்கு, வரகூராம்பட்டி சாய் காம்ப்ளக்ஸ், மாலை, 4:00 மணிக்கு திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை, 6:00 மணிக்கு தேவனாங்குறிச்சி விநாயகர் கோவிலுக்கு ரத யாத்திரை செல்கிறது.
பெரியார் பல்கலையில்
ஒற்றுமை உறுதிமொழி
மேட்டூர்: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி, நேற்று, நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை நாள் கடைப்பிடிக்கப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் பல்கலை நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் மாணவ, மாணவியர் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனர். அதில் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் உறுதி மொழி வாசிக்க, அனைத்து நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா அவர்கள் ஒற்றுமை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, ஒற்றுமை ஓட்டம், 2 கிலோ மீட்டர் வரை சென்று முடிவடைந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பிரகாஷ், சுகுணா ஆகியோர் பங்கேற்றனர்.
விவசாய நிலத்தில்
மயங்கி கிடந்தவர் சாவு
சேலம், நவ. 1-
சேலம், கன்னங்குறிச்சி, கோம்பைபட்டி, கவுரி
புரத்தை சேர்ந்தவர் சித்தையன், 59; இவரின் விவசாய நிலத்தில், நேற்று மதியம், 12:30 மணிக்கு அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்கவர் மயங்கி கிடந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவ
மனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், மதியம், 2:15 மணிக்கு இறந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.