திருச்சி: நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு, மார்ச் 29ம் தேதி, மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருச்சியில் இருந்து, கல்லணை செல்லும் சாலையில், அவரது உடல் கம்பிகளால் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கொலை சம்பவம் தொடர்பாக, ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் சி.பி.ஐ., விசாரணை நடத்தியும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் என்பவர், கொலையாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சென்னை, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி, துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தினர். 1000க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி, சந்தேகப்படும்படியான 20க்கும் மேற்பட்டவர்களை பேரை, விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.கடந்த 22ம் தேதி, அவர்களை, சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி., ஷகில் அக்தர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், சீர்காழி சத்தியராஜ், கணேசன், மாரிமுத்து உட்பட, 13 பேர் இன்று(நவ.,1) திருச்சி ஜூடிசியல் 6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் விசாரணை அதிகாரியாக இருக்கும் எஸ்.பி., வராத காரணத்தால் மனு மீதான விசாரணையை வரும் 7ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.