திருநெல்வேலி:சொத்துப் பிரச்னையில், 70 வயது தாயை எரித்துக் கொன்ற 'பாசக்கார' மகன் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி, கே.டி.சி., நகரைச் சேர்ந்தவர் அரசம்மாள், 70. கணவர் சிவசுப்பு இறந்து விட்டார். மகன் அண்ணாமலை, 47, மனைவி அனிதா, 42, மற்றும் குழந்தைகளுடன் வசித்தார்.
அவர் பெயரில் உள்ள சொத்துக்களை அண்ணாமலை தனக்கு தரும்படி கேட்டார். இது தொடர்பாக அரசம்மாளுக்கும், மருமகள் அனிதாவுக்கும் மோதல் ஏற்பட்டது.
வீட்டின் பின்புறம் ஒரு அறையில் அரசம்மாள் தனித்து தங்க வைக்கப்பட்டார். சொத்துகளை கைப்பற்ற மாமியாரை கொலை செய்ய அனிதா திட்டமிட்டார்.
சம்பவத்தன்று மகனும், மருமகளும் சேர்ந்து அரசம்மாளை தாக்கினர். அவர் மயங்கியதும், இறந்து விட்டதாக கருதி, அங்கு கிடந்த கட்டைகளை அவர் மீது போட்டு தீ வைத்து எரித்தனர்.
வீட்டில் புகை வருவதை கண்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில், அரசம்மாளை அடித்துக் கொலை செய்து எரித்ததை அண்ணாமலையும், அனிதாவும் ஒப்புக் கொண்டனர். இருவரையும் கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர்.