சென்னை,சென்னையில் மூன்றாவது நாளாக மழை பெய்து வரும் நிலையில் சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக இரவு, பகலாக, 19 ஆயிரத்து 500 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வரின் கொளத்துார் தொகுதி உட்பட வடசென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, மக்களின் இயல்பு நிலை முடங்கியுள்ளது.
வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, சென்னையில் கடந்த மூன்று நாட்களில் பெரம்பூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் 17 செ.மீ., மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் 16 செ.மீ., சோழிங்கநல்லுார், அயனாவரம், அம்பத்துார், எம்.ஜி.ஆர். நகர், நுங்கம்பாக்கத்தில் தலா 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வட சென்னையில் 36 மணி நேரத்தில், 30 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய 90 சதவீத மழை அளவை, வடசென்னை மூன்று நாட்களில் பெற்றுள்ளது. அப்பகுதிகளில், சராசரியாக 22 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக கொளத்துார் வெற்றி நகர், மந்தவெளி பேருந்து நிலையம், வில்லிவாக்கம் ஜனநாதன் தெரு, பெரம்பூர் பி.பி. சாலை, பட்டாளம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அலுவலர்கள் 2,000 பேர், துாய்மை பணியாளர்கள் 19 ஆயிரத்து 500 பேர் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது. ஆனாலும், தொடர் மழையால் சில பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
சென்னையில் கடந்தாண்டு மழைநீர் தேங்கிய மாம்பலம், அசோக்நகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பகுதிகளில், இந்தாண்டு மழைநீர் தேங்கவில்லை. ஆனாலும், இந்த இடங்களில் உள்ள சில பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்கள் 7 செ.மீ., நீரை உள்வாங்கும் திறன் கொண்டவை. அதைவிட அதிகமாக மழை பெய்தால், மழைநீர் வடிய இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் மழைநீர் சீராக செல்கிறது. சில பிரதான சாலைகள், உட்புற சாலைகளில் மட்டுமே மழைநீர் தேக்கம் உள்ளது.
அந்த பகுதிகளில், நீர் கடைசியாக சென்று சேரக்கூடிய நீர்நிலைகளில், நீர் உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அந்த இடங்களில் எல்லாம், மோட்டார் பம்புகள் வாயிலாக மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது.
தற்போது, மழைநீரை வெளியேற்றும் பணிகளில் அலுவலர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பழைய சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு தலா பத்து பணியாளர்கள், விரிவாக்கப்பட்ட வார்டுகளில் தலா ஐந்து பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மழைக்காலம் முடியும் வரை, மழைநீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபடுவர்.
மழை நின்றவுடன், மழைநீர் வடிகால், நீர்நிலைகள் துார்வார மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:தற்போது பெய்து வரும் மழை நின்றவுடன், மழைநீர் வடிகால்கள், நீர்நிலைகளில் அவசரகாலம் கருதி உடனடியாக துார்வாரப்படும். அப்போது தான், அடுத்து வரும் மழைக்கு, மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
வடசென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால், மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.வடசென்னையில் ஜி.என்.டி., சாலை, பேசின்பாலம் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பிராட்வே நெடுஞ்சாலை, வால்டாக்ஸ் சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அம்பேத்கர் கல்லுாரி சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, உள்ளிட்ட சாலைகள் முக்கியமானவை. இச்சாலைகள் வழியாக, நாள்தோறும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இச்சாலைகளில், வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி அலுவலகங்கள், குடியிருப்புகளும் அதிகளவில் உள்ளன.இச்சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் முறையாக கட்டப்படவில்லை. கட்டுமானம் நடந்து வரும் இடங்களில் பணிகள் இன்னும் முடியவில்லை. கால்வாய் கட்டுமானத்திற்கு தோண்டப்பட்ட மண், கால்வாயின் இரண்டு புறங்களிலும் கொட்டி மூடப்பட்டு உள்ளது.கடந்த மூன்று நாட்களாக இப்பகுதிகளில், மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால், கால்வாய்களில் செல்லவேண்டிய மழைநீர், வெளியேற வழியின்றி சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியுள்ளது. இவற்றுடன், கழிவுநீரும் கலந்துள்ளது. இதனால், வடசென்னையில் புளியந்தோப்பு, கல்யாணபுரம், கணேசபுரம், பெரம்பூர், வால்டாக்ஸ் சாலை, தண்டையார்பேட்டை, எழில்நகர், பாரதியார் நகர், மூலக்கடை, வேப்பேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிப்போர், கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் வாயிலாக சில இடங்களில் பம்ப் மோட்டார்கள் வாயிலாக, சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொற்று நோய், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வடசென்னையின் அனைத்து பகுதிகளிலும், மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.