நாகர்கோவில்:நிலப்பிரச்னை தொடர்பாக போராட்டம் நடத்திய எட்டு பாதிரியார்கள் உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குமரிமாவட்டம் கொல்லங்கோடு அருகே துாத்துார் புனிதயூதா கல்லுாரிக்கு பின்புறம் உள்ள 13 ஏக்கர் நிலம் தொடர்பாக பிரச்னை இருந்த வந்த நிலையில் நாகர்கோவிலை சேர்ந்த அகமது ரஷீது என்பவருக்கு சொத்து உரிமை ஆவணங்களை வருவாய்துறை வழங்கியது. இதனால் அகமது ரஷீது நித்திரவிளை போலீஸ் பாதுகாப்புடன் தனது சொத்தில் வேலி அமைத்தார்.
இதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பிரித்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக எட்டு பாதிரியார் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சின்னத்துறையை சேர்ந்த ராஜூ என்பவரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து எட்டு பங்கு தந்தையரும், நுாற்றுக்கணக்கான மீனவர்களும் நித்திரவிளை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். 11:00 மணி நேரம் நடந்த போராட்டத்துக்கு பின்னர் ராஜூ விடுவிக்கப்பட்டார்.
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதாக பாதிரியார்களான துாத்துார் ஷாபின், சின்னத்துறை ஜிபு, மார்த்தாண்டம்துறை சுரேஷ்பயஸ், நீரோடி கிளீட்டஸ், இரவிபுத்தன்துறை ரெஜிஸ்பாபு, இரையுமன்துறை அஜித் ஜான் சுமேஷ், பூத்துறை பென்சி, வள்ளவிளை ரிச்சர்டு சகாரியஸ் உட்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.