பெ.நா.பாளையம் : தடாகம் வட்டாரத்தில் யானைகள் தொல்லையை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தடாகம் வட்டார விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்துார், பன்னிமடை, காளையனுார், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவ்வப்போது யானை-மனித மோதல்கள் ஏற்படுவதால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ரேஷன் கடை உள்ளிட்டவற்றை குறிவைத்து யானைகள் ஊருக்குள் வந்து செல்கின்றன.
புலி உறுமல் சப்தம்
யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தடாகம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தாளியூரில் நடந்தது.
கூட்டத்தில்,'யானைகள் ஊர்களுக்குள் வருவதை தடுக்க நிறுவப்படும் சூரிய மின்வேலியை வலுப்படுத்துவதுடன் அதில், ஒளி, ஒலி அமைப்புகளை நிறுவ வேண்டும். சுழலும் விளக்கு, தேனீக்கள், புலிகளின் உறுமல் சப்தம் ஆகியவற்றை யானைகள் வரும் பாதையில் ஏற்படுத்தலாம்.
சூரிய மின்வேலியை தொடர்ந்து அகழியை ஆறடி ஆழத்தில் அமைக்க வேண்டும். கடினமான இரும்பு கம்பங்களை வேலி அமைக்க பயன்படுத்தலாம். விவசாயிகளுக்கு வனத்துறையினர் அதிக சக்தி வாய்ந்த 'டார்ச் லைட்' வழங்க வேண்டும். யானைகளை விரட்ட 'ரப்பர்' குண்டுகளை பயன்படுத்த வனத்துறை ஆலோசனை செய்யலாம். யானைகளை விரட்ட பட்டாசுகளை பயன்படுத்தும்போது, அவை தோட்டத்திற்குள் நுழைந்து ஓடும்போது பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்படுகிறது. மாலை நேரங்களில் யானைகள் மலையோர கிராமங்களுக்குள் புகும் பாதைகளை கண்டறிந்து, அதே இடத்தில் யானைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். யானைகளின் ஊடுருவலை கட்டுப்படுத்த, 'ட்ரோன்'களை பயன்படுத்தலாம். தடாகம் வட்டாரத்தில் சமீபகாலத்தில், 50 ஆண்டுகள் வளர்ந்த தென்னை மரங்களை, யானைகள் கீழே தள்ளி சேதப்படுத்தியுள்ளன.
இதை தடுக்க, வனத்துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். யானைகளின் வரவை பெருமளவு தடுத்துள்ள, காரமடை வட்டாரத்தில் உள்ள அகழிகளை தடாகம் வட்டார விவசாயிகள் பார்வையிடுவது என,' முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகள் தவிப்பு
தடாகம் பகுதி விவசாயிகள் கூறுகையில்,'யானை போன்ற விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால், குறைந்த அளவு நஷ்ட ஈடு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதுவும், காலதாமதமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகள் பயிர்சேத நஷ்ட ஈடு பெற, அதுதொடர்பான சான்றிதழ்களை வருவாய் துறையினர், தோட்டக்கலை மற்றும் வனத்துறை அலுவலர்களிடம் இருந்து பெற வேண்டியுள்ளது.
இதனால் பலர் நஷ்ட ஈடு தொகை பெற முடியாமல் தவிக்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து விதமான சான்றிதழ் பெற, அரசு வழி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.