பொள்ளாச்சி : கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இருந்து, விவசாய நிலங்களில் கல் விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவாரிகளில் இருந்து கல் வெளியே வந்து விழக்கூடாது, என, கல்குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், விவசாயிகளுக்கான ஆய்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட, கிணத்துக்கடவு தாலுகாவில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. கல்குவாரிகளில் அனுமதி பெற்ற அளவை விட கூடுதலான பரப்பில் பாறை உடைக்கப்பட்டுள்ளது. பாறை உடைக்க அதிக வெடி மருந்து பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோன்று, பாறையில் இருந்து கற்கள் சிதறி விழுவதாகவும், 'பர்மிட்' அளவை விட அதிக யூனிட் கனிமவளத்தை லாரிகளில் கொண்டு செல்கின்றனர்.
இதனால், கேரள மாநிலம் செல்லும் கிராம சாலைகள் அனைத்தும் உருக்குலைந்துள்ளன. இதனால், கல்குவாரிகளுக்கு எதிரான போராட்டங்களும், டிப்பர் லாரிகளை சிறைபிடிப்பதும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கிணத்துக்கடவு, நெம்பர் 10 முத்துார், முத்துக்கவுண்டனுார், கல்லாபுரம், பொட்டையாண்டிபுறம்பு உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம், கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்தது. தாசில்தார் மல்லிகா தலைமை வகித்தார்.
பொதுமக்கள், விவசாயிகள் பேசுகையில், 'கேரள மாநில வாகனங்களில், தமிழகத்தில் இருந்து கனிம வளங்களை எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது.
பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக்குழுவை அமைத்து, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பாறைகளை ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
தினமும், மாலை, 5:00 மணிக்கு மேல் குவாரிகளில் இருந்து வாகனங்களை இயக்குகின்றனர். அதிகப்படியான ஆழத்துக்கு குழி தோண்டி வெடிவைக்கப்படுகிறது. இதனால், சுற்றுப்பகுதிகளில் அதிர்வு ஏற்படுகிறது. விளைநிலங்களில் கற்கள் சிதறி விழுகின்றன.
அதிக கனிமவளம் ஏற்றிக்கொண்டு 'டிப்பர்' வாகனங்கள் செல்வதால், ரோடுகள் உருக்குலைந்துள்ளன. அதிவேகத்தில் லாரிகள் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்து தவிர்க்கவும், ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போல்டர் (பெரிய அளவிலான) சைஸ் கற்களை உடைக்க கூடாது, சிறிய அளவிலான பாறைகள் உடையும் அளவுக்கு வெடி வைக்க வேண்டும்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் தடையின்மை சான்று மற்றும் நில விவரங்களை மறைத்துள்ளனர். பாறை உடைப்பதற்கான உரிமம் பெற்று நிறைய கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன. இதைஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கல்குவாரி உரிமையாளர்கள் பேசுகையில், 'சட்ட விதிகளுக்கு உட்பட்டு பாறைகளை உடைக்கின்றோம். பாறைகளை ஆய்வு செய்து, விதிமீறல் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம். அரசு அதிகாரிகள், வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யலாம்.
ஆனால், பொதுமக்கள் அடிக்கடி வாகனங்களை தடுத்து நிறுத்தி பிரச்னை செய்கின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இருதரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த தாசில்தார், 'கல் குவாரிகளில் இருந்து விவசாய நிலங்களில் கல் விழுந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவாரிகளில் இருந்து கல் வெளியே வந்து விழக்கூடாது.
அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குவாரிகள் இயங்க வேண்டும். இருதரப்பு கருத்துக்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கிணத்துக்கடவு வருவாய்துறை அதிகாரிகள், போலீசார் பங்கேற்றனர்.