உடுமலை : 'உடுமலை பகுதிகளில், கனிம வளக்கொள்ளை, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால், பசுமை பகுதி பாழாகி வருகிறது; இனியும் அலட்சியம் காட்டுவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
உடுமலையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில், நேற்று நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
நிலம் ஆக்கிரமிப்பு
ஜல்லிபட்டியில், அரசுப்பள்ளிக்கு அருகில், மிகப்பெரிய ஓடை நீர் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு, பல முறை புகார் தெரிவித்த பின், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, அளவீடு செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றாத நிலையில், போலீஸ் பாதுகாப்புடன், ஓடையை மறித்து கம்பி வேலி அமைத்துள்ளனர். ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக போலீசாரே உள்ளனர்.
நீர் வழித்தடம் மறிக்கப்பட்டு, கன மழை பெய்தால், அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமின்றி, ஏராளமான விளைநிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கும்.
நீர் வழித்தட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும். எலையமுத்துார் பகுதியில், தனியார் நிறுவனம், அரசுக்கு சொந்தமான, 26 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. முறைகேடாக அமராவதி ஆற்றிலிருந்து நீர் எடுப்பதுடன், தற்போது கட்டடம் கட்டப்படுகிறது. மக்களின் பாரம்பரிய வழித்தடங்களையும் மறித்துள்ளனர்.
நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் பெறப்பட்ட நிலங்கள், கல்லாங்குத்து புறம்போக்கு, தரிசு நிலம் என, ஆயிரம் ஏக்கர் நிலங்களை, முறைகேடாக ஆவணங்கள் தயாரித்து, ஆக்கிரமித்துள்ளனர்.
இழுபறி
ஜம்புக்கல் மலை, ஆக்கிரமிக்கப்பட்டு, பசுமை அழிக்கப்பட்டு வருகிறது. புகார் கொடுத்த விவசாயிகள் மீதே, அதிகாரிகள் வழக்கு, விசாரணை என அலைக்கழிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை பட்டா நிலங்களையும், போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்து, ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டி வருகின்றனர்.
கலெக்டர், தமிழக முதல்வர் வரை மனு அளித்தும், இரு ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை.
மலை, மலையடிவாரத்திலுள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்து,விரிவாக ஆய்வு செய்து, மீட்க வேண்டும்.
வாளவாடி, குரல்குட்டையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக பராமரிக்காமலும், ஆக்கிரமிப்புகளாலும் மாயமாகி வருகிறது.
கோவில் நிலங்களை மீட்கவும், விவசாயிகளுக்கு குத்தகை அடிப்படையில், வழங்கி வருவாய் பெருக்கவும், கோவில்களில் நித்ய பூஜைகள் நடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிம வள திருட்டு
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், விதி மீறி செயல்படும் குவாரிகளால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமும், பல நுாறு டன், கல், மண், ஜல்லி, எம்-சாண்ட் என கனிம வளங்கள், அனுமதியின்றி முறைகேடாக கடத்தப்படுகிறது.
அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிப்பதோடு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது.
கேரளாவிற்கும், 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. வழியோரத்திலுள்ள, 'சிசிடிவி' காட்சிகளை சேகரித்தாலே, பெருமளவு கனிம வளக்கொள்ளை நடப்பது உறுதிசெய்யப்படும்.
மடத்துக்குளம் தாலுகா சாளரப்பட்டியில், அனுமதியின்றி செயல்படும் குவாரியிலிருந்து, கல், மண் ஆகியவை தொடர்ந்து திருடப்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் திருடப்படுகிறது.
தடை செய்யப்பட்ட வெடி பொருட்களை பயன்படுத்தி, 24 மணி நேரமும், பாறை உடைக்கப்படுவதால், சுற்றிலும் உள்ள ஏராளமான விவசாயிகள் பாதிக்கின்றனர்.
பல முறை விவசாயிகள் புகார் கொடுத்தும், மாவட்ட கலெக்டர் கண்காணிப்புக்குழு அமைத்த நிலையில், புகார் கொடுத்தவர்களை அதிகாரிகள் அழைத்து கூட்டம் நடத்தாமல், தடையில்லை என முறைகேடாக அறிக்கை அனுப்பியுள்ளனர்.
அருகிலுள்ள விவசாய நிலங்களில், குவாரி குழியில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்படுவதால், விவசாயம் செய்ய முடியாமல், பயிர்கள் நாசமடைந்தது.
மைவாடியில், அமராவதி கால்வாய் அருகே, 150 லோடுக்கு மேல், பல அடி ஆழத்திற்கு மண் திருடப்பட்டுள்ளது.
அனுமதியின்றி, விவசாய நிலங்களிலும் பல அடி ஆழத்திற்கு மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து, மருத்துவக்கழிவுகள் கொண்டு வந்து, உப்பாறு ஓடை மற்றும் பிரதான ரோடுகளின் ஓரங்களில், கொட்டி வருகின்றனர்.
இரு மாநில எல்லைகளிலுள்ள செக்போஸ்ட்கள் இருந்தும், போலீசார் கண்டு கொள்வதில்லை. இவ்வாறு, பேசினர்.