சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையில் நடக்கும் மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில், பெண்களில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை, ஆண்களில் சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணிகள் 'சாம்பியன்' கோப்பைகளை கைப்பற்றின.
அண்ணா பல்கலையின், நான்காவது மண்டல ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, காட்டங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இதில், பெண்கள் பிரிவில் நான்கு அணிகளும், ஆண்களில் ஒன்பது அணிகளும் பங்கேற்றன.
பெண்களுக்கான முதல் அரையிறுதியில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணி, 33 - 4 புள்ளிக்கணக்கில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணியை வென்றது.
இரண்டாவது அரையிறுதியில், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி 13 - 1 புள்ளி கணக்கில் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி 13 - 3 புள்ளிக்கணக்கில் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரியை வென்று மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து நடந்த இறுதிபோட்டியில், எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி 24 - 8 புள்ளிக்கணக்கில் மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லுாரியை தோற்கடித்து, 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.
விறுவிறுப்பு
அதேபோல், ஆண்களுக்கான முதல் அரையிறுதிப் போட்டியில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி 26 - 8 புள்ளிக்கணக்கில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி 49 - 32 புள்ளிக்கணக்கில் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரியை வென்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி 56 - 54 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரி அணியை தோற்கடித்து 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, எஸ்.ஆர்.எம்., வள்ளியம்மை பொறியியல் கல்லுாரியின் முதல்வர் முருகன் கோப்பைகளை வழங்கினார். கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் கணபதி உள்ளிட்டோர் இருந்தனர்.