சென்னை, :கிண்டி தொழிற்பேட்டை வளாகம், அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள காலி இடத்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதன் காரணமாக தொழிற்சாலைகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதையடுத்து எழுந்த தொடர் புகாரையடுத்து, குப்பை வளாகத்திற்கு, தற்காலிகமாக 'சீல்' வைத்து 'சிட்கோ' நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 1958ல், கிண்டி, சிட்கோ தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டது. இங்கு, 500க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இது தவிர, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் தலைமை அலுவலகம், தொழிற்பயிற்சி நிலையங்கள், காவல் நிலையம், விடுதி உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன.
தொழிற்பேட்டை வடகிழக்கு பகுதியில், அடையாறு ஆற்றை ஒட்டி, 1.75 ஏக்கர் பரப்பில் காலி இடம் உள்ளது. இதில், 75 சென்ட் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டது.
1 ஏக்கர் இடம்
மீதமுள்ள, ஒரு ஏக்கர் இடத்தில், பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்படுகிறது. சிட்கோ வளாகம், சென்னை மாநகராட்சி, 168வது வார்டில் இருந்தாலும், சாலை, வடிகால், தெருவிளக்கு, குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை, சிட்கோ நிர்வாகம் செய்கிறது.
சில மாதங்களுக்கு முன், குப்பை சேகரிப்பு பணியை, தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்திடம், சிட்கோ ஒப்படைத்தது. காலி இடம் குப்பையை தரம் பிரிக்கத் தான் ஒதுக்கப்பட்டது.
ஆனால், நிர்வாக குளறுபடியால், தரம் பிரித்த பின் சேரும் குப்பையை, பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்ட, மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை. கடந்த 2020ம் ஆண்டு, சிட்கோ இயக்குனர் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதனால், தொடர்ந்து தரம் பிரிக்காத குப்பையை மலைபோல் குவித்து வந்தனர். இதுபோக, இரவு நேரத்தில் வெளி இடங்களில் இருந்தும், வேன், லோடு ஆட்டோவில் கொண்டு வரும், கட்டட கழிவுகள், வீட்டு பயன்பாட்டு பொருட்கள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் கொட்டப்பட்டன.
இதனால், சுகாதார சீர்கேடு, மர்ம காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டிய மாநகராட்சியின் சுகாதாரத்துறையும் கண்டு கொள்ளவில்லை.
இதனால், சுற்றி உள்ள உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சிட்கோ, மாநகராட்சி இணைந்து குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், குப்பை வளாகத்திற்கு, தற்காலிகமாக 'சீல்' வைத்துள்ளது.
குப்பை கிடங்கில் இருந்து, எப்போதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சமீபத்தில் பெய்த மழையால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு, வாந்தி, மூச்சுத்திணறல், மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதனால், தொழில் நிறுவனத்திற்கு அடிக்கடி விடுப்பு விட வேண்டிய நிலை ஏற்படுகிறது; உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. குப்பை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிற்பேட்டை நிறுவன நிர்வாகிகள்
குப்பையை, தரம் பிரிக்க மட்டும் தான் இந்த இடத்தை ஒதுக்கி உள்ளோம். மீதமுள்ள குப்பை கழிவுகளை கொட்ட மாநகராட்சி கிடங்குகளில் இடம் கேட்டுள்ளோம். உயர் அதிகாரிகள் மத்தியில் பேச்சு நடக்கிறது. 10 நாட்களில், நல்ல முடிவு எட்டப்படும். 22ம் தேதி, குப்பை வளாகத்தை மூடி விட்டோம். வெளி வாகனங்கள் வரமுடியாது. கூடுதல் காவலாளி நியமித்து கண்காணிக்கப்படும்.
'சிட்கோ' அதிகாரிகள்
தொழிற்பேட்டை பராமரிப்பு பொறுப்பை, எங்கள் சங்கம் கையில் எடுத்து சில மாதங்கள் தான் ஆகின்றன. சிட்கோ நிர்வாகத்துடன் இணைந்து தான் பல பணிகள் செய்து வருகிறோம். இரவு நேரத்தில், வெளியே உள்ள கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள், உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் குப்பையை, சட்டவிரோதமாக இங்கே கொட்டியதால், சுகாதார சீர்கேடு போன்ற பிரச்னை ஏற்பட்டது. தற்போது, வளாகம் 'சீல்' வைக்கப்பட்டது. மாநகராட்சி, குப்பை கிடங்கில் இடம் ஒதுக்கி தரும் வரை, சிட்கோ வளாக குப்பையை, தரம் பிரித்து கையாள மாற்று இடம் தேர்வு செய்துள்ளோம்.
நிர்வாகிகள், தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்
குப்பை மலைபோல் குவிந்ததால், துர்நாற்றம் வீசி தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தொடர் புகாரையடுத்து, நேற்று முன்தினம், குப்பை வளாகத்திற்கு தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் பூட்டு போட்டது. வெளி வாகனங்கள் பூட்டை உடைத்து உள்ளே செல்லாத வகையில், சிட்கோ நிர்வாகம் பூட்டி 'சீல்' வைத்தது.இதையும் மீறி, பூட்டை உடைத்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் மற்றும் குப்பை கொடுத்து அனுப்பிய நிறுவனங்கள் மீது, காவல் துறை வழியாக நடவடிக்கை எடுக்க சிட்கோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வாகனங்களை கண்காணிக்க, இரவு நேர ஊழியர்களை நியமிக்கவும் முடிவு செய்துள்ளனர்.