சென்னை :மும்மையில் நடந்த, தேசிய பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., கல்லுாரி மாணவியர் வெற்றி பெற்று, ஆசிய தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர்.
இந்திய பாய்மரப் படகுச் சங்கம் சார்பில், தேசிய சீனியர் பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டிகள், மும்பை துறைமுகத்தில் இம்மாதம் 13ல் துவங்கி 20ம் தேதி வரை நடந்தது.
இப்போட்டியில், நாடு முழுதும் உள்ள 15 பாய்மர படகோட்டி கிளப்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாலுமிகள் பங்கேற்றனர்.
ஒரு சுற்றுக்கு, 12 பந்தயங்கள் என மொத்தம் எட்டு சுற்றுகள் வீதம் போட்டிகள் நடந்தன. ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு என, மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில் பி.டெக்., பயிலும் நேத்ரா குமணன் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். இவர் தேசிய அளவில், 11வது தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பல்கலையின் எம்.பி.ஏ., மாணவி ஜெயலட்சுமி வெள்ளி வென்றுள்ளார்.
இந்த வெற்றியால், இருவரும், ஆசிய போட்டியின் முதல் தகுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.