சென்னை, டிவிஷன் ஹாக்கி லீக் போட்டியில், நேற்றைய ஆட்டத்தில், அபிபுல்லா மெமோரியல் ஹாக்கி கிளப் அணி, அடையார் யங்ஸ்டர்ஸ் அணியை, ஏழு கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் ஹாக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகின்றன.
இப்போட்டியில், தமிழக தபால் அணி, ரிசர்வ் வங்கி, மின் வாரியம் என, கிளப் மற்றும் அகாடமிகளைச் சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று முன்தினம் நடந்த போட்டிகளில், எம்.ஆர்.சி., கிளப் மற்றும் அசோக் லேலண்ட் அணிகள் மோதின. அதில், துவக்கத்தில் இருந்தே எம்.ஆர்.சி., அணி ஆதிக்கம் செலுத்தியது.
முடிவில், 8 - 0 என்ற கோல் கணக்கில் எம்.ஆர்.சி., அணி வெற்றி பெற்றது.
அணியின் வீரர் சுப்பையா அபார ஆட்டத்தை வெளிபடுத்தி, 7, 39, 40வது நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்தார்.
மற்றொரு போட்டியில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை அணி மற்றும் ஆர்.வி., அகாடமி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளும், 0 - 0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதியிலும், 30 நிமிடங்கள் வரை இரு அணிகளும் சமநிலையை தக்க வைத்தன.
பின், 40வது மற்றும் 43வது நிமிடங்களில் ஆர்.வி., அணியின் வீரர் அருண் இரண்டு கோல்களை அடித்தார்.
அவரை தொடர்ந்து, எதிரணியினர் 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் கொடுத்தனர். முடிவில், 2 - 1 என்ற கணக்கில் ஆர்.வி., அகாடமி அணி வெற்றி பெற்றது.
நேற்று நடந்த, முதல் போட்டியில், அபிபுல்லா மெமோரியல் ஹாக்கி கிளப் மற்றும் அடையார் யங்ஸ்டர்ஸ் அணிகள் மோதின. அதில், 8 - 1 என்ற கோல் கணக்கில் அபிபுல்லா அணி வெற்றி பெற்றது.