சென்னை :சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகராட்சி சார்பில், சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு பணி முதற்கட்டமாக ஜூலை 1ம் தேதி முதல் மண்டல வாரியாகவும், இணையதள இணைப்புடன் கூடிய மொபைல் போன் தரவு வாயிலாகவும் நடந்தது.
இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் விடுபட்ட வியாபாரிகள் கண்டறிந்து, கணக்கெடுப்பு செய்யும் பணி நடைபெற உள்ளது.
இதுவரை பதிவு செய்யாத சாலையோர வியாபாரிகள், தங்கள் பகுதியில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வரும் பணியாளர்களிடம், தங்களுடைய சுய விபரம், விற்பனை பற்றிய தகவல்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களை காண்பித்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகங்களில் வரும் 29ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் வரும் 30 முதல் டிச., 6ம் தேதி வரை பதிவு செய்யலாம்.ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் மண்டலங்களில், டிச., 7 முதல் 13ம் தேதி வரையிலும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் டிச., 14 முதல் 21 வரை பதிவு நடைபெறுகிறது.