சென்னை:தாம்பரம் ரயில் நிலையம் நடைமேடை 4ல் இருந்து நேற்று மதியம் 1:25 மணி அளவில் புறப்பட்ட, தாம்பரம் - சென்னை கடற்கரை மின்சார ரயிலில், மின்சாரத்தை கடத்தும் 'பேன்டோகிராப்' கருவியில் திடீரென பழுது ஏற்பட்டதால் ரயில் நின்றது.
இதையடுத்து, ரயில் ஓட்டுனர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தொழில்நுட்ப பணியாளர்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மின்சார ரயில்களுக்கான மின் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதனால், அங்குள்ள நடைமேடை 1, 2, 3, 4ல் இருந்து புறப்பட வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து, புறப்பட வேண்டிய ஆறு மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இரண்டு மணி நேரம் வரையில், தாம்பரம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம், சானிட்டோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது.
மின்சார ரயிலில் காத்திருந்த பயணியர் சிலர், அருகே உள்ள பேருந்து நிலையங்களுக்கு சென்றனர்.
பின், மாலை 3:30 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
4 ரயில்கள் ரத்து
தாம்பரம் ரயில்வே யார்டில் உள்ள ரயில் பாதைகளில், நாளையும் நாளை மறுநாளும் நள்ளிரவு 12:40 மணி முதல் அதிகாலை 2:10 மணி வரையில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரவு 11:40 மணி, இரவு 11:59 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன
தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 11:20 மணி, இரவு 11:40 மணி ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன என, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.