திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஊராட்சி, கீழ அருந்ததிபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.
கூலி தொழிலாளியான இவருக்கு, மேனகா என்ற மனைவியும், ஐந்து குழந்தைகளும் உள்ளனர்.
இதில், இரண்டாவது மகள் மீனா, 2021ம் ஆண்டு, பூண்டி அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து, 467 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு அரசு கல்லுாரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில், இந்த ஆண்டு, திருத்தணி தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., படிக்க இடம் கிடைத்துள்ளது.
இதற்கு, ஆண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் இவரால் அந்த பணத்தை செலுத்த முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் பரிதவித்து வருகிறார்.
இதுகுறித்து மாணவி மீனா கூறியதாவது:
என் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியவில்லை. என் தாய், நுாறு நாள் வேலை செய்து, எனக்கும், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு படித்து வரும் தம்பிகள் இருவரையும் படிக்க வைத்து வருகிறார்.எனக்கு கல்வி கற்கும் ஆர்வம் அதிகமாக இருந்தாலும், குடும்ப வறுமை காரணமாக பெற்றோரால் 90 ஆயிரம் ரூபாயை கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. என் உயர்கல்வி கனவை நிறைவேற்ற, உதவி செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
குடும்பத்தில் முதல் பட்டதாரி கனவுடன் உள்ள மீனாவிற்கு உதவி செய்ய விரும்புவோர், 9360267864 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.