சென்னை, ஸ்ரீசத்ய சாய்பாபாவின் 97வது பிறந்த நாள் விழா, நேற்று, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.அவரது 85வது பிறந்த நாள் விழாவில், அப்போது துணை முதல்வராக இருந்த ஸ்டாலினுடன், சென்னை மேயராக இருந்த சுப்பிரமணியன் பங்கேற்றார்.
அவ்விழாவில், தான் பேசிய வீடியோவை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று, தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அவரது 85வது பிறந்த நாள் விழாவில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:சென்னை, குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்த நாட்களை நினைத்து பார்க்கிறேன். இரவு துாங்காமல், குடிநீருக்காக மக்கள் காத்திருந்தனர். மக்களின் சுகாதாரம், மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம் துவக்கப்பட்டது. ஆனால், கால்வாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, போதுமான தண்ணீர் சென்னை வந்தடையவில்லை.
யாரும் கோரிக்கை வைக்காமல், ஸ்ரீ சத்யசாய்பாபா, 2002, ஜன., 19ல், 'சென்னை மக்களுக்கு குடிநீர் சென்றடைய உதவுவோம்' என அறிவித்தார்.
அவரது வழிகாட்டுதலின் படி, சத்யசாய் அறக்கட்டளை, உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. நவீன தொழில்நுட்ப உதவியுடன், குறைந்த காலத்தில் கால்வாய் புனரமைக்கப்பட்டது.
தற்போது, கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து விடுவிக்கப்படும் தண்ணீர், தமிழக எல்லைக்கு நான்கு நாட்களில் வந்தடைகிறது. சென்னை மக்களின் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. சென்னை நகர மக்கள், போதுமான குடிநீரை பெறுகின்றனர்.
சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரத்துக்கு உதவிய, ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு நன்றி. அவரது 97ம் பிறந்த நாளில் நன்றி பெருக்குடன் நினைவு கூர்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.