வியாசர்பாடி, வரலாறு பெற்ற ரவீஸ்வரர் கோவில் குளம், 90 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்கப்பட உள்ளது.
வியாசர்பாடியில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ராஜராஜன் சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
சூரியன் தன் பிரம்மதோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக, இங்குள்ள வன்னி மரத்தடியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜித்து வந்ததாகவும், அதன் விளைவாக, இறைவன், சூரியன் முன் தோன்றி, அருள் செய்து பிரம்மதோஷத்தை நீக்கியதாகவும் ஐதீகம்.
இந்த கோவிலின் குளத்தில், 16வது நாள் காரியம், புண்ணியதானம் மற்றும் திவசம் உள்ளிட்ட நிகழ்வுகளை, அதிக அளவில் இப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
ஆனால், கோவில் குளத்தின் படிக்கட்டுகள் முழுவதும் உடைந்து, மோசமான நிலையில் பராமரிப்பின்றி காட்சியளித்தது.
சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், 'குடி'மகன்களின் கூடாரமாகவும், குப்பை கொட்டும் வளாகமாகவும் கோவில் குளம் மாறியது. இதனால், குளத்தை புனரமைத்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, 90 லட்ச ரூபாய் செலவில், கோவில் குளத்தில் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு புறத்தில், 12 அடியில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட உள்ளன. குளத்தை சுற்றி பாதை வசதிகளும், மின்விளக்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கோவில் குளத்தில் படிக்கட்டுகள், சாய்தளங்கள் புனரமைக்கப்பட்டு சீரமைக்கப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.