புழல் :மாதவரம் மண்டலம், 25வது வார்டு, புழல் அடுத்த விநாயகபுரம், நேரு நகர், மாதவரம் ரெட்டேரியை ஒட்டி அமைந்துள்ளது.
இதன் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள, 40 வீடுகளை, ஆக்கிரமிப்பு வீடுகளாக கண்டறிந்த நீர்வளத் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, அவற்றின் உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.
அதற்காக, ஆக., - அக்., மற்றும் இம்மாதம், 21ம் தேதி என, மூன்று முறை, கால அவகாசத்திற்கான 'நோட்டீஸ்' வழங்கினர்.
இந்த நிலையில், அங்கு வசிப்போர், நேற்று காலை 10:00 மணிக்கு, புழல், பாலாஜி நகரில் உள்ள, மாதவரம் தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின், 'குடியிருப்புகளை அகற்றும் உத்தரவை வாபஸ் பெற வேண்டும்' என, மாதவரம் தாலுகா தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த 1992ம் ஆண்டு வரை, மூலக்கடை அன்னை சத்யா நகரில் வசித்து வந்தோம். நாங்கள் வசித்த பகுதியை அரசு கையகப்படுத்தி, தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது.
அதனால், சைதாப்பேட்டை வருவாய் துறையின் மூலம், அங்கிருந்த 28 குடும்பத்தினருக்கு, மேற்கண்ட இடத்தில் மாற்று இடம் ஒதுக்கியது.
ஆனால், இதுவரையிலும், எங்கள் பகுதிக்கான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அரசு செய்யவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.