தாம்பரம்,தாம்பரம் மாநகராட்சி, ஐந்தாவது மண்டல குழு கூட்டம், நேற்று நடந்தது. இதில், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறியதாவது:
வார்டுகளில் அடிப்படை பணிகள் எதுவும் நடக்கவில்லை. குறிப்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் வார்டுகளில், குப்பை எடுத்தல், மின்விளக்கு பராமரிப்பு, குடிநீர், சாலை என எந்த பணியும் நடப்பதே இல்லை.
பணிகள் தொடர்பாக மனு கொடுத்தும், தீர்மானத்தில் சேர்ப்பதில்லை. அதிகாரிகள், மக்கள் பணிகளின் மீது கவனம் செலுத்துவதே கிடையாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும், அம்பேத்கர் நகரில் உள்ள ஒன்பது தெருக்களில் கால்வாய்களை துார்வாரி, மூடி போடுவதற்கு கண்துடைப்புக்காக, 1.40 லட்சம் ரூபாய்க்கு தீர்மானம் வைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சங்கர் தலைமையில், அக்கட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஐந்தாவது மண்டல குழு தலைவர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.