பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை, அணை ஏரியில் இருந்து உபரி நீர் செல்வதற்காக, 49 கோடி ரூபாய் மதிப்பில் பொதுப்பணித் துறை வாயிலாக போக்கு கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
இதை, நெடுஞ்சாலை வடிகாலுடன் இணைப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் - -வேளச்சேரி சாலையில் பள்ளம் தோண்டி ராட்சத குழாய் புதைக்கப்பட்டது.
அதன் மேல் பகுதி முறையாக மூடப்படாமல் மண் கொட்டப்பட்டது. மேலும், அச்சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆங்காங்கே நடந்து வருவதால், சாலை குறுகியுள்ளது.
இந்நிலையில் குழாய் புதைக்கப்பட்ட பகுதியில், நேற்று காலை சென்ற நான்கு சக்கர வாகனங்களின் சக்கரங்கள் மண்ணில் சிக்கின. அப்பகுதியினர் உதவியுடன் வாகனங்கள் நகற்றப்பபட்டன.
இந்நிலையில், அதே இடத்தில் கனரக வாகனம் சிக்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ௧ கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, போக்குவரத்து துறை போலீசார் ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு கனரக வாகனத்தை அப்புறப்படுத்தினர். இப்பிரச்னையால் அச்சாலையில் காலை முதல் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.