குரோம்பேட்டை, :தென் சென்னையில் உள்ள, ஒரே அரசு மருத்துவமனை குரோம்பேட்டையில் செயல்படுகிறது. தினம் 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டதும், இம்மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், 2021, அக்டோபரில் அனுமதி வழங்கியது. 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.
இம்மருத்துவமனையை, தாம்பரம் சானடோரியத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்க, இருதரப்பு இடையே கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில், இடம் தேர்வு தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று மாலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
குரோம்பேட்டை மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக மேம்படுத்த, 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து, 27 ஆயிரம் சதுர அடியில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
சானடோரியத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி, அடுத்த மாதம் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆதாராம் இருந்தால் கொடுங்கள்
இம்மருத்துவமனையில், சில நாட்களுக்கு முன், 'இங்குபேட்டரில்' வைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட ஆண் குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அமைச்சர் சுப்பிரமணியத்திடம், நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''அரசு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால், அதை குறை கூறுவதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. ஆதாரம் இருந்தால் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்,'' என்றார்.