கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் 526 கிராமப்புற நுாலகங்களுக்கு புத்துயிர் அளிக்கும் நடவடிக்கையில், ஊரக வளர்ச்சி துறையினர் ஈடுபட்டுள்ளனர். 5.26 கோடி ரூபாயில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள், நுாலகத்தில் ஏற்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 2006 - 07 முதல், 2010 - 11ம் ஆண்டு வரை 526 ஊரக நுாலகங்கள் துவக்கப்பட்டன. கிராமப்பகுதி இளைஞர்கள் தங்களின் அறிவைப் பெருக்கும் வகையில் நுாலகங்கள் துவக்கப்பட்டன.
சீரமைக்க உத்தரவு
இந்த நுாலகங்கள், 10 ஆண்டுகளில் முறையாக பராமரிக்கப்படாததால் பயன்பாடில்லாமல் பூட்டியே கிடந்ததால் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தன.
தற்போது, தமிழக அரசு அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் துவக்கப்பட்ட நுாலகங்களை மூன்றில் ஒரு பங்காக பிரித்து, மூன்று ஆண்டுகளில் சீரமைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் உள்ள 526 நுாலகங்களில் 5.26 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 2021 - 22ம் ஆண்டு 152 நுாலகங்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது 2022 - 23ம் ஆண்டில் 152 நுால்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள நுாலகங்கள் 2023 - 24ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கப்படும்.
இந்த நுால்கங்கள் முறையாக சீரமைக்கப்பட்டு கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் நுாலகம் இருந்தால் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 'துாய்மை பாரதம்' திட்ட நிதியினை பயன்படுத்தி கூடுதல் கழிப்பறையும் கட்டப்படும்.அலமாரி, மேசை போன்ற அடிப்படை தேவைகளுக்காக ஒவ்வொரு நுாலகத்திற்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
புதிய புத்தகங்கள்
மேலும், ஒவ்வொரு நுாலகத்திற்கும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய புத்தகங்கள் வழங்கப்படும்.
இதேபோல, தரமான செய்தித்தாள்கள் மற்றும் இதழ்களின் சந்தாக்களை பெறுவதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
மேலும், நுாலகங்களில் பணி நிறைவு பெற்ற அரசு, தனியார் நுாலகர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் துறை அலுவலர்களை கவுரவ நுாலகர்களாக பணியமர்த்திக் கொள்ளலாம்.
ஓய்வு பெற்ற பணியாளர்கள் இல்லையெனில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமும் நுாலகத்தை செயல்படுத்தலாம்.
8ம் வகுப்பு தேர்ச்சி
நுாலகர் பணிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுாலகராக நியமிக்கப்படுபவர் ஊராட்சி மன்ற தலைவரின் பெற்றோர், கணவன், மனைவி, மகன், மகளாக இருக்கக்கூடாது.
கிராம ஊராட்சியில் வார்டு உறுப்பினராகவும் இருக்கக் கூடாது. 58 வயது மற்றும் அதற்கு மேல் வயதுடையவராகவும், முன்னாள் ராணுவ வீரர்களாக இருப்பின் 50 வயது நிறைவு பெற்றவர்களாகவும் அக்கிராமத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளதாக ஒன்றிய அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.