'அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் நாளிதழில் தொடர்ந்து வெளியான செய்திக்கு எதிரொலியாக, படுமோசமாக இருந்த வில்லிவாக்கம் ரயில்வே சாலை புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம் 94வது வார்டு, வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால், குறைந்தபட்ச பராமரிப்பு கூட ரயில்வே மேற்கொள்ளவில்லை.
இதனால், சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக மாறியது. மேலும், சாலையை ஆக்கிரமிப்புகளை காரணம் காட்டி, புது சாலை அமைக்காமல் அலட்சியமாக இருந்தனர். இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, ஆக., 5ம் தேதி ரயில்வே சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆனால் முறையான கண்காணிப்பு செய்யப்படாததால், மீண்டும் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் முளைக்க துவங்கின.
இந்த நிலையில், சமீபத்தில் பெய்த கன மழையால் சாலையில் நிலைமை மேலும் மோசமானது. மக்களும் கடும் அவதியடைந்து வந்தனர்.
இது குறித்து, நம் நாளிதழும் சமீபத்தில் சுட்டிக்காட்டியது. இதன் பின் ஒரு வழியாக ரயில்வே நிர்வாகம் புதிய சாலை அமைக்கும் பணியை துவங்கியுள்ளது.
இதனால், பல ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
மேலும், ரயில் நிலையத்தில் செல்ல இந்த வழி மட்டுமே உள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -