சென்னை சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கும் வகையில், அபராதத்தை அதிகரிக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்தது.
அதன்படி, 'ஹெல்மெட், சீட் பெல்ட்' அணியாமலும், மொபைல் போனில் பேசியபடியும் வாகனம் ஓட்டினால், ஒவ்வொரு குற்றத்திற்கும், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. போதையில் வாகனம் ஓட்டினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.
இதேபோல், சிறுவர் - சிறுமியர் வாகனம் ஓட்டினால், அவர்களது பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
சென்னையில், ஒவ்வொரு சந்திப்பிலும் தினமும் ஐந்து பேருக்கும் குறையாமல், சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வருகின்றனர். பிடிக்கும்போது, அவர்கள் படிப்பு, எதிர்காலம் கருதி, பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை செய்து அனுப்புகிறோம்.
எனினும் சிலர், அதே தவறை திரும்ப செய்கின்றனர். விபத்து ஏற்படுத்தி உயிர் இழப்பு ஏற்பட்டால், பெற்றோர் தான் சிறைக்கு சென்று, இழப்பீடு வழங்க வேண்டி வரும். நண்பர், உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் யாராக இருந்தாலும், வாகனம் கொடுத்தவர்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும். சிறுவர் - சிறுமியர் வாகனம் ஓட்டுவதை தீவிரமாக கண்காணிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுவர் - சிறுமியர் வாகனம் ஓட்டினால், பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதம் சிறை தண்டனை கிடைக்கும். மேலும், வாகனம் ஓட்டிய சிறுவர் - சிறுமியர், 25 வயது வரை ஓட்டுனர் உரிமம் பெற முடியாது. இதை உணர்ந்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வாகன ஓட்டுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக, பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
-வட்டார போக்குவரத்து அதிகாரிகள்