சென்னை :'சிம்பாக்ஸ்' கருவி வாயிலாக, சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு பேசிய, வடமாநில நபர் உட்பட மூன்று பேரை பிடித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அமைந்தகரை, எம்.எம்., காலனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, சட்ட விரோதமாக, 'சிம்பாக்ஸ்' என்ற கருவி வாயிலாக, உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வெளிநாடு களுக்கு பேசப்படுவதாக, மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, ஐ.பி., மற்றும் சைபர் கிரைம் போலீசார் பி.எஸ்.என்.எல்., தொழில்நுட்ப அதிகாரிகள் தொலை தொடர்பு துறையினர் இணைந்து, அமைந்தகரை எம்.எம்., காலனி, மற்றும் பொன்னுவேல் தோட்டம் 3வது தெருவில் உள்ள வீடுகளில் நேற்று மாலை சோதனை செய்தனர்.
அங்கு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த வடமாநில வாலிபர் மற்றும் வேலுாரைச் சேர்ந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.
மூன்று பேரிடம் இருந்து நான்கு சிம்பாக்ஸ் கருவி, 120 சிம் கார்டுகள், வலைதள ரவுட்டர் பாக்ஸ் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். அவர்கள், வெளிநாடுகளில் யாருடன் பேசினர்.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.