திருவொற்றியூர், எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், 1962ல் கட்டப்பட்ட 60 ஆண்டு பழமையான, கத்திவாக்கம் கிளை நுாலகம் செயல்படுகிறது. இதில் 3,700 பேர் உறுப்பினராக உள்ளனர்.
தினமும் 200க்கும் மேற்பட்டோர், நுாலகம் வரும் நிலையில், 10 பேர் அமர்ந்து படிக்க கூட இருக்கைகள் இல்லை. தவிர, கட்டடம் சேதமடைந்து காணப்பட்டது.
நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், தொகுதி மேம்பாட்டு நிதி 1 கோடி ரூபாய் ஒதுக்கினார்.
தொடர்ந்து, நுாலகம் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வு பணி நேற்று நடந்தது. பொதுப்பணி துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ., கூறுகையில், ''வைரவிழா கண்ட கத்திவாக்கம் கிளை நுாலகம் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.