புதுவண்ணாரப்பேட்டை, :புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சுமித்ரா, 24. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகின்றன. மோனித், 8, ரோஹித், 6, என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்த சுமித்ரா சுய நினைவில்லாமல் இருந்தார். இதை பார்த்து அவரது அம்மா ரெஜினா, சுமித்ராவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.
ஆனால், அங்கு மருத்துவ பரிசோதனையில் சுமித்ரா இறந்தது தெரிய வந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேக மரணம் என பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த நிலையில் நேற்று சுமித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.
அதில், சுமித்ரா தாக்கப்பட்டதில், தலையில் உள்காயம் இருந்ததும், கழுத்து நெரிக்கப்பட்டதும் என, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொலை வழக்கு பதிவு செய்து, சுமித்ராவின் கணவர் செல்வத்திடம் போலீசார் விசாரிக்கின்றனர்.