பள்ளிக்கரணை :சென்னையின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்று தாம்பரம் - -வேளச்சேரி பிரதான சாலை. இந்த சாலையில், பள்ளிக்கரணை முதல் நாராயணபுரம் வரையிலான துாரத்தில், தற்போது மழை நீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன் துவங்கிய இப்பணிகள், மந்தகதியில் நடப்பதால், ஆகஸ்ட் இறுதியில் துவங்கிய போக்குவரத்து நெரிசல், இன்று வரை தொடர்கிறது. 'பீக் ஹவர்' நேரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பதால், அந்த நேரங்களில், பள்ளிக்கரணையில் இருந்து நாராயணபுரம் வரையிலான 4 கி.மீ., துாரத்தை கடப்பதற்கே ஒரு மணி நேரமாகிறது.
அரசு பேருந்துகள், கழிவு நீர் லாரிகள், தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மிக அதிக அளவில் பயணிப்பதால், இதர வாகன ஓட்டிகள், விபத்து அபாயத்துடனேயே பயணிக்கின்றனர்.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
வாகன நெரிசல் மிக அதிகமாக இருக்கும் 'பீக் ஹவர்' நேரத்தில், பள்ளிக்கரணை முதல் நாராயணபுரம் வரையில், போக்குவரத்து போலீசார் அதிக எண்ணிக்கையில் பணியில் ஈடுபட்டு, நெரிசலை குறைக்க முயற்சி எடுக்கலாம்.
வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரணை, ஜல்லடையான்பேட்டை, மேடவாக்கம், மாடம்பாக்கம், பெரும்பாக்கம் செல்வதற்கு மாற்று வழித்தடம் இல்லாததால், இந்த சாலையில்தான் அனைவரும் பயணித்தாக வேண்டும்.
தினமும் பல லட்சம் வாகனங்கள் பயணிக்கும் இந்த சாலையில், நான்கு மாதங்களாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க, தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.
தமிழக நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி கூறியதாவது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க, அரசால் திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான பணிகள், நெடுஞ்சாலை துறையால், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் துவக்கப்பட்டன.
அதன்படி, தாம்பரத்திலிருந்து வேளச்சேரி செல்வதற்கு முக்கிய சாலைகளாக உள்ள தாம்பரம்- - வேளச்சேரி பிரதான சாலை மற்றும் பல்லாவரம் - -துரைப்பாக்கம் இடையேயான ரேடியல் சாலை ஆகிய இரு சாலைகளிலும், மழை நீர் வடிகால் பணிகள் நடக்கின்றன.
இதில், தாம்பரம்- - வேளச்சேரி பிரதான சாலையில், பள்ளிக்கரணையில் உள்ள அணை ஏரி முதல், நாராயணபுரம் தனியார் பொறியியல் கல்லுாரிக்கு எதிரே உள்ள சதுப்பு நிலம் வரை, 1,030 மீட்டர் நீளத்துக்கு, 13 அடி உயரம், 13 அடி அகலத்தில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதற்காக 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
தற்போது வரை 220 மீட்டருக்கு மட்டுமே பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 810 மீட்டரில் பணிகள் முடிவடைய இன்னும் ஐந்து மாதங்கள் ஆகலாம்.
இத்திட்டம் துவங்கப்பட்டபோத, அதற்கான கால அளவாக, அதாவது கட்டுமான பணிகள் முழுமையடைந்து, சாலைகள் மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கு, 2023 ஜூன் மாதம் ஆகலாம் என்றே கணக்கிடப்பட்டது. ஆனால், பணிகள் துரித கதியில் நடப்பதால், முன்னதாக ஏப்ரல் மாதம் முடிந்துவிடும்.
அதேபோல், பல்லாவரம்- - துரைப்பாக்கம் இடையே உள்ள ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரி முதல் கீழ்க்கட்டளை ஏரி வரை, சாலையின் இருபக்கமும் சேர்த்து, மொத்தம் 20 ஆயிரம் அடி நீளத்திற்கு வடிகால் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு, அதில் 8,858 அடி வரை பணிகள் முடிந்துள்ளன.
அடுத்து, கீழ்க்கட்டளை ஏரி முதல் நாராயணபுரம் ஏரி வரை, சாலையின் இரு பக்கங்களிலும் சேர்த்து, 11 ஆயிரத்து 482 அடியில் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இதில், 8,200 அடிக்கு பணிகள் முடிந்துள்ளன.
நாராயணபுரம் ஏரி முதல், ரேடியல் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனை அருகே உள்ள சதுப்பு நிலம் வரை, சாலையின் ஒரு பக்கம் மட்டும் 2,395 அடி துாரத்துக்கு பணிகள் துவங்கப்பட்டு, அதில் 1,082 அடியில் பணிகள் முடிந்துள்ளன.
ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரி முதல் சதுப்பு நிலம் வரையிலான மழை நீர் வடிகால் பணிகளுக்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஏரியை வந்தடையும் மழை நீர், மற்றோர் ஏரியை சென்றடையும் விதமாக, அவ்விரு ஏரிகளுக்கும் இடையே, முறையான கட்டுமானத்தை நிறுவி, வடிகால்களை அமைத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மழை நீர் வடிகால் பணி குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:மழை காலத்திற்கு முன்பே வடிகால் பணிகள் முடிந்துவிடும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், வடிகால் பணிகள் துவங்கப்பட்டு, இதுவரையில் 40 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக, நெடுஞ்சாலை துறை தெரிவிக்கிறது.ரேடியல் சாலையில், பல்லாவரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை அமைக்கப்படும் வடிகால் பணிகளுக்கு 140 கோடி ரூபாய் ஒதுக்கீடு என்பது, நம்பும்படியாக இல்லை. அதைவிட குறைவான தொகையே இதற்கு செலவிடப்பட வேண்டும். ஏனென்றால், அ.தி.மு.க., ஆட்சியில் 30 சதவீத கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.சதுப்பு நிலத்தின் உயரத்தைவிட, மழை நீர் வடிகால்களில் உயரம் குறைவாக இருப்பதுபோல் தெரிகிறது. அப்படியானால், உயரம் குறைவான இடத்திலிருந்து மேடான இடத்திற்கு நீர் செல்வது கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.