செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் வழங்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் வங்கிகள் மற்றும் கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 20 கிளைகள்; 89 தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மூன்று கூட்டுறவு நகர வங்கிகள்; 11 நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள் இயங்குகின்றன.
ஆழ்துளை கிணறு
அதுமட்டுமின்றி, இரண்டு தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் இயங்குகின்றன.
இவை அனைத்தும், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து, மாவட்ட இணை பதிவாளர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது.
ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம், சம்பா பருவம், நவரை பருவம், சொர்ணவாரி பருவங்களில், நெல் விவசாயம் நடக்கிறது.
அதோடு, கரும்பு, மணிலா, கொடி வகை பயிர்கள், தர்ப்பூசணி உள்ளிட்டவையும் சாகுபடி செய்யப்படுகின்றன.
மாவட்டத்தில், விவசாயி களுக்கு, நடப்பு ஆண்டில், பயிர்க்கடனாக, 100 கோடி ரூபாய் வழங்க, கூட்டுறவுத் துறை இலக்கு நிர்ணயித்தது.
தொடர்ந்து, கடந்த அக்., மாதம் வரை, 8,083 விவசாயிகளுக்கு, 55.29 கோடி ரூபாய், வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டது.
இக்கடனை விவசாயிகள் தவணை தேதிக்குள் திருப்பி செலுத்தினால், வட்டி வசூலிக்கப்படுவதில்லை.
அதற்கான ஏழு சதவீதம் வட்டி செலவினத்தை, அரசே ஏற்றுக்கொள்கிறது.
நெல் சாகுபடி
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு, நியாயமான விலை கிடைக்கும் வகையில், விளை பொருட்களின் உற்பத்தியின்பேரில், தானிய ஈட்டுக்கடனாக, நடப்பு ஆண்டில் 17 கோடி ரூபாய் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதில், 116 பேருக்கு, 5.54 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதால், ஏரிகள் நிரம்பி வருகின்றன. விவசாயிகளும், நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சிறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை, கிராம நிர்வாக அலுவலரிடம், விவசாய நிலங்களின் சிட்டா, அடங்கல் ஆகியவற்றை வாங்கி, பயிர்க்கடன் பெற, கூட்டுறவு கடன் சங்கங்களில், கடனை பெற்றுக்கொள்ளலாம்.
மாவட்டத்தில், சம்பா பருவம், நவரை பருவம், சொர்ண வாரி பருவம் ஆகிய மூன்று பருவங்களில், நெல் சாகுபடி செய்து வருகிறோம். ஒருமுறை மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. மூன்று பருவத்திற்கும் கடன் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--எம்.வெங்கடேசன்
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்
மாவட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் அனைவரும், பயிர்க்கடன் பெற, கடன் சங்கங்களை அணுகி, வட்டியில்லா கடனை பெற்றுக்கொள்ளலாம்.
- பெயர் குறிப்பிடாத வேளாண் துறை அதிகாரி