உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரிக்கரை பலவீனமாக உள்ளதால், ஏரியில் முழுமையாக தணணீர் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டு, செய்யாற்றில் இருந்து ஏரிக்கு வரும் நீர்வரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், இந்தாண்டு நீர்வரத்து பாதிக்கப்படும் என, விவசாயிகள் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன், நந்திவர்ம பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்ட 'வைரமேகன் தடாகம்' என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
ஏரி 20 அடி ஆழம் உடையது. மழைக்காலத்தில் முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரை வைத்து, 18 மதகுகள் வழியாக வேடபாளையம், மேனலுார், அரசாணிமங்கலம் உட்பட 18 கிராமங்களில், 5,636 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
இந்த ஏரியின் நீர்வரத்துக்காக 8 கி.மீ., துாரத்தில் உள்ள அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டில் இருந்து, தனி வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அனுமந்தண்டலம் அணைக்கட்டு நிரம்பி, அங்கிருந்து செய்யாற்று நீர்வரத்து கால்வாய் மூலம், உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.
ஆனால், சில மாதங்களுக்கு முன், உத்திரமேரூர் ஏரிக்கரையின் குறிப்பிட்ட சில பகுதியில் விரிசல் ஏற்பட்டு, சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும், சேதமான ஏரிக்கரைப் பகுதி முழுமையாக சரி செய்யப்படவில்லை.
இதனால், செய்யாற்றில் இருந்து, உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் சென்றடைந்தால், ஏரி முழுமையாக நிரம்பி, ஏரிக்கரை பகுதி உடைப்பு ஏற்படக்கூடும் என்பதால், அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு பகுதி தண்ணீரை, உத்திரமேரூர் ஏரிக்கு தற்போது திருப்பாமல், நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது.
இதனால், இந்த ஆண்டு ஏரி முழுமையாக நிரம்பாததால், பல பகுதிகளில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உத்திரமேரூர் விவசாயிகள் கூறியதாவது:
உத்திரமேரூர் ஏரியில் மூன்று கலங்கல்கள் உள்ளன.
மழைக்காலத்தில் ஏரி முழுமையாக நிரம்பினால், இந்த கலங்கல்கள் வழியாக வெளியேறும் உபரி நீர், பல கிராம நீர்நிலைகளை நிரப்பி, இறுதியாக 30 கி.மீ., துாரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியை சென்றடையும்.
ஒரு மாதமாக செய்யாற்றில் நீர்வரத்து தொடர்வதால், உத்திரமேரூர் ஏரி முன்னதாகவே முழுமையாக நிரம்பி, தற்போது கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி இருக்க வேண்டும்.
ஆனால், ஏரி பாதுகாப்பின் முன் எச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி, செய்யாற்று நீர் வரத்து தடுத்ததால், ஏரி முழு கொள்ளளவை எட்ட இயலவில்லை.
இதனால், உத்திரமேரூர்- - மதுராந்தகம் இடையிலான நீர் நிலைகள் நிரம்ப வழிவகை இல்லாமல், பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உத்திரமேரூர் ஏரி நீர் பாசன பிரிவு பொதுப்பணித் துறை அதிகாரி கூறியதாவது:
உத்திரமேரூர் ஏரியில், 17 அடி ஆழம் கொள்ளளவு நீர் இருப்பு உள்ளது. அதாவது 0.65 டி.எம்.சி., கனஅடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்தண்ணீர், இந்த ஏரிக்கான பாசன நிலங்களுக்கு, சாகுபடி காலத்திற்கு போதுமானதாகும். ஏரிக்கரை சேதம் அடைந்துள்ளதால், ஏரியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஏரிக்கரை மற்றும் மதகுகள் முழுமையாக சீரமைத்து பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதற்காக, மத்திய அரசின் 'ஜல் சக்தி' துறை சார்பில், 'டிரிப்பிள் ஆர்' திட்டத்தின் கீழ், 17 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணி செய்ய, விரிவான திட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏரியில் தண்ணீர் குறைந்த பின், சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.