கோவை நகரில், கோர்ட் உத்தரவை மீறி, அரசு மற்றும் தனியார் பஸ்களில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அரசு டவுன் பஸ்களில், பெண்கள் இலவச பயணம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க., அளித்த வாக்குறுதியின்படி, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆனால் கோவையில் இத்திட்டம், பெரும்பாலான பெண்களுக்குப் பயனளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. ஏனெனில், மக்கள் கூட்டம் அதிகமாகவுள்ள வழித்தடங்களில், இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் சாதாரண பஸ்களின் இயக்கம், பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவியரும், வேலைக்குச் செல்லும் பெண்களும் உரிய நேரத்துக்கு, பஸ் கிடைக்காமல், அதிக கட்டணம் வசூலிக்கப்படும் அரசு சொகுசு பஸ்களில் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு, அரசு பஸ்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் விதிமீறல், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, இதுதொடர்பாக பொதுநல மனுவும் தாக்கல் செய்துள்ளது.
அதற்கு முன்பே, கோவை உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் கோர்ட்களிலும், இந்த சட்டவிரோத கட்டண உயர்வுக்கு எதிராக, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதுவரை, 1500க்கும் மேற்பட்ட அரசு பஸ்களில் அதிகக் கட்டணம் வாங்கியதற்காக, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக, ஐகோர்ட் அளித்த உத்தரவில், கட்டணம் அதிகம் வாங்கும் பஸ்களின் பர்மிட்டையே ரத்து செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தவறு செய்வதை ஒப்புக் கொண்டே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில், அபராதங்களும் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால் தவறு திருத்தப்படவே இல்லை.
தனியார் பஸ்களிலும் அதிகம்
கோவையில் தற்போது, அரசு பஸ்களைப் பின்பற்றி, தனியார் பஸ்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, கோவையிலிருந்து ஈரோடுக்கு பஸ் கட்டணம் 62 ரூபாய் என்று அரசு நிர்ணயித்துள்ளது; ஆனால் அரசு பஸ்களில் 95 ரூபாயும், தனியார் பஸ்களில் 65 ரூபாயும் வாங்கப்படுகிறது.
கடந்த வாரத்தில், ஊட்டியில் அரசு டவுன்பஸ்சில் எட்டு ரூபாய் அதிகம் வாங்கியதற்காக, போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கட்டணம் அதிகம் வாங்குவதைத் தடுக்காத, ஆர்.டி.ஓ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு, பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால் கோவையில் சமீபகாலமாக, அனைத்து அரசு பஸ்களிலும் இஷ்டத்துக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்கள், மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவற்றை தடுத்து, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டண விதிமீறலைத் தடுக்க வேண்டியது, மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டரின் கடமையாகும்.
பஸ்களிலேயே பயணம் செய்யாத, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மீதும், அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஆர்.டி.ஓ.,க்கள் மீதும், மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். இல்லாவிட்டால், இதுபற்றி கோர்ட் கேட்கும் கேள்விகளுக்கும், கலெக்டரே பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
கோவையில் சமீபகாலமாக, அனைத்து அரசு பஸ்களிலும் இஷ்டத்துக்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களை மட்டுமே நம்பியுள்ள ஏழை மக்கள், மிகவும் கஷ்டப்படுகின்றனர். இவற்றை தடுத்து, அரசு மற்றும் தனியார் பஸ்களின் கட்டண விதிமீறலைத் தடுக்க வேண்டியது, மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டரின் கடமையாகும்.
-நமது நிருபர்-