புதுச்சேரி,-புதுச்சேரியில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து ஏரியில் புதைத்த ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் மூவரை 10 ஆண்டிற்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி, முதலியார்பேட்டையில் உள்ள உழந்தை ஏரிக்கரையில் சில தினங்களுக்கு முன் சிலர் குழிதோண்டி, அங்கிருந்து ஒரு சடலத்தை எடுத்ததாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.பி., ரவிக்குமார் உத்தரவின் பேரில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கிடைத்த தகவலின் பேரில் பிரபல ரவுடி பாஸ்கர் கூட்டாளிகளான அனிதா நகர் வேல்முருகன்,42; சரவணன்,32; சக்தி நகர் மனோகர்,29; ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அனிதா நகரை சேர்ந்த ரவுடி பாஸ்கர்,48; கடந்த 2013ம் ஆண்டு, தனது மனைவி எழிலரசியை கொலை செய்து ஏரிக்கரையில் புதைத்ததும், அந்த எலும்புக்கூட்டை தற்போது தோண்டி எடுத்து அப்புறப்படுத்திய அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார், நேற்று முன்தினம் பாஸ்கரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஏழிலரசி, என்பவரை கடந்த 1998 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதலியார்பேட்டை, அனிதா நகரில் வசித்து வந்தோம்.
இந்நிலையில், பெரியார் நகர் செல்வம் கொலை வழக்கில் எனது அண்ணன் பிரபல ரவுடி கருணாவுடன் 2010ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சிறை சென்றேன். சிறையில் இருந்தவாறு எனது கூட்டாளி செந்தில் மூலம் வெளியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தேன். அப்போது, செந்தில், எழிலரசி இடையே தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது.
அதனால், எழிலரசியை கொலை செய்ய முடிவு எடுத்தேன்.
இதற்காக, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம், சிறையில் இருந்து 30 நாள் பரோலில் வெளியே வந்து, கிருமாம்பாக்கத்தில் அவரது தங்கை வள்ளி வீட்டில் பிள்ளைகளுடன் தங்கியிருந்த எழிலரசியை மட்டும், வீட்டிற்கு போகலாம் எனக் கூறி, காரில் ஏற்றிக் கொண்டு வந்தேன். வரும், வழியில், எழிலரசியை அவரது சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்து, உழந்தை ஏரிக்கரையில் கூட்டாளிகள் மூலம் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் புதைத்தேன். அப்போது, உடல் சீக்கிரம் மக்குவதற்காக அதன் மீது யூரியா கொட்டினேன்.
பின், பரோல் முடிந்து சிறை சென்று, கடந்த 2015ம் ஆண்டு, நன்னடத்தையின் பேரில் விடுதலையாகி வெளியே வந்தேன். பின்னர், எழிலரசியின் தங்கை வள்ளி பராமரிப்பில் இருந்த எனது இரு மகன்களுடன் வசித்து வந்தேன்.
இந்நிலையில், எழிலரசி உடல் புதைத்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடப்பதை அறிந்து, அங்கு குழி தோண்டினால் எலும்பு கூடுகள் தெரிந்துவிடும் என பயந்தேன்.
அதனால், 2 மாதங்களுக்கு முன் கூட்டாளிகளோடு ஜே.சி.பி., மூலம் உடலை புதைத்த இடத்தில் தோண்டி எலும்பு கூட்டை எடுத்து ஏரியில் வீசிவிட்டு, அதில் இருந்த சேலையை எரித்ததை ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, எழிலரசியை கொலை செய்த அவரது கணவர் பாஸ்கர், மேலும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த பாஸ்கரின் கூட்டாளிகளான வேல்முருகன், சரவணன், மனோகர் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கொலை செய்து விட்டு 10 ஆண்டாக அப்பாவி போல வாழ்ந்து வந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருமாம்பாக்கத்தில், தங்கை வீட்டில் தங்கியிருந்த எழிலரசியை, கடைசியாக பாஸ்கர் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் அழைத்து சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை.இதுகுறித்து அவரது சகோதரி, பாஸ்கரிடம் கேட்டபோது, அதை நீ கேட்டால் உனது பிள்ளைகளை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து, அவரும் புகார் தராமல் இருந்தது, தற்போதைய போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.