புதுச்சேரி-அரசு பள்ளி மாணவிகளிடம் முறைகேடாக நடக்க முயன்ற சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்களில் இருவர் மீது 'போக்சோ' பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி, நகர பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி ஒன்றில் சில தினங்களுக்கு முன் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற பெற்றோர்கள், மூன்று ஆசிரியர்கள், மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் அணுகுவதாக புகார் தெரிவித்தனர்.
அதனை பள்ளி நிர்வாகம் ஏற்காததால், பெற்றோர்கள் கல்வித் துறை செயலரிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக, விசாரணை செய்யக்கோரி, கல்வித்துறை செயலர் உத்தரவிட்டார்.
துணை இயக்குநர் (பெண் கல்வி) நடனசபாபதி தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரித்தனர். அதில், புகார் உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களையும் கடந்த 12ம் தேதி கல்வித்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
தொடர் விசாரணையில், மூன்று ஆசிரியர்களில் ஏசுராஜா,51; வீரப்பன்,52; ஆகியோர் மாணவிகளிடம் தவறான கண்ணோட்டத்தில் அணுகியது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆசிரியர்கள் ஏசுராஜா, வீரப்பன் ஆகியோர் மீது பெரியக்கடை இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.