நாகர்கோவில்:நிலக்கல் - பம்பை இடையே இலவச பஸ்களை இயக்க அனுமதி கேட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக பத்தணந்திட்டை கலெக்டரை சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தினர்
பக்தர்கள் பயணம் செய்யும் வாகனங்களில் 15 இருக்கைகள் வரை உள்ளவை பம்பை சென்று பக்தர்களை இறக்கி விட்டு நிலக்கல் வந்து விட வேண்டும். பெரிய வாகனங்கள் எல்லாமே நிலக்கல்லில் நிறுத்த வேண்டும். இதில் வரும் பக்தர்கள் கேரள அரசு பஸ்சில் பம்பை செல்ல வேண்டும்.
அனைத்து பக்தர்களும் பம்பையில் இருந்து கேரள அரசு பஸ்சில் நிலக்கல் வந்து தங்கள் வாகனங்களில் ஊர் திரும்ப வேண்டும்.
இந்த தடத்தில் கேரள அரசு போக்குவரத்துக்கழகம் ஏசி, சூப்பர் டீலக்ஸ் போன்ற பல விதமான பஸ்களை இயக்கி பல விதமான கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. இதற்கு கேரள பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நிலக்கல் - பம்பை இடையே 20 பஸ்களை இலவசமாக இயக்க தயாராக உள்ளதாக விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பத்தணந்திட்டை கலெக்டரை, கேரள மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் விஜிதம்பி சந்தித்து பஸ்களை இயக்க அனுமதி கோரியுள்ளார். தேவசம்போர்டு மற்றும் ஐகோர்ட் நியமித்துள்ள தனி ஆணையருக்கும் இந்த கோரிக்கை மனு அளித்துள்ளதாக அவர் கூறினார்.