மதுரை : மேற்குத் தொடர்ச்சி மலையில் தனியார் விடுதிகள் வணிக நடவடிக்கைக்காக அருவிகளின் இயற்கையான நீரோட்டத்தை சட்டவிரோதமாக திசை திருப்புவதை தடுக்க குழு அமைக்க வேண்டும். சீல் வைத்து, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வினோத் தாக்கல் செய்த பொதுநல மனு:
தென்காசி, திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சில தனியார் விடுதிகள் இயற்கையான குளம், அருவி, ஓடைகளின் நீர்வரத்தை தடுத்துள்ளன. அவற்றை திசை திருப்பி செயற்கையான குளம், அருவிகளை அமைத்துள்ளனர். இதை இணையதளத்தில் அறிவிப்பு செய்கின்றனர். தனிப்பட்ட முறையில் லாபமடைவதற்காக இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் வனத்தில் வாழும் விலங்குகள், பறவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மேற்குத் தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மனித நடவடிக்கைகளால் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் சட்டவிரோதமாக செயற்கையான அருவி, நீரோடை, ஆறு அமைத்துள்ள தனியார் விடுதிகளை அகற்றக்கோரி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு வினோத் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு:
தனியார் விடுதிகள் (ரிசார்ட்டுகள்)/ எஸ்டேட்கள் வணிக நடவடிக்கைக்காக அருவிகளின் இயற்கையான நீரோட்டத்தை சட்டவிரோதமாக திசை திருப்புவதை தடுக்க தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி கலெக்டர்கள் உடனடியாக குழு அமைக்க வேண்டும். அக்குழு மாவட்ட வன அலுவலர்களின் உதவியுடன் தமிழகம் முழுவதும் அமைந்துள்ள தனியார் விடுதிகள் / எஸ்டேட்களில் ஆய்வு செய்ய வேண்டும்.
அருவியின் இயற்கையான நீரோட்டத்தை சட்டவிரோதமாக தங்களின் சொத்துக்களுக்குள் திசை திருப்பி, செயற்கையான அருவிகளை உருவாக்கிய தனியார் விடுதிகள் / எஸ்டேட்களுக்கு உடனடியாக சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன் உரிமையாளர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோதமாக இயற்கையான நீரோட்டத்தை தடுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தரப்பில் டிச., 1 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.