புதுச்சேரி-அரசின் எச்சரிக்கையை மீறி, அமைச்சக ஊழியர்களின் கூட்டுப்போராட்டக் குழுவினர் நேற்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சக உதவியாளர் பணியை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதை கைவிடவேண்டும். 100 சதவீதம் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைச்சக ஊழியர்களின் கூட்டுப்போராட்டக்குழு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக ஒரு நாள் விடுப்பு எடுத்து தர்ணா நடத்தப்படும் என அறிவித்தனர்.
ஒட்டுமொத்த விடுப்பு எடுத்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பு செயலர் நேற்று முன்தினம் எச்சரித்திருந்தார்.
ஆனால், அமைச்சக ஊழியர்களின் கூட்டுப்போராட்டக் குழுவினர் அரசின் உத்தரவை மீறி, ஏற்கனவே அறிவித்தபடி நேற்று ஒரு நாள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபை அருகே, ஜென்மராகினி ஆலயம் எதிரில் நடந்த தர்ணா போராட்டத்திற்கு சேஷாசலம் தலைமை தாங்கினார். முருகவேல் வரவேற்றார். பரசுராமன், பிரபாகரன் முன்னிலை வகித்தனர். செல்வம், பிரின்ஸ் அருள்தாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
செந்தில்குமார், சிவக்குமார், மணிகண்டன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, இளமுருகன் மற்றும் அன்பரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆனந்தரசன், கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினர்.
விஜயக்குமார் நன்றி கூறினார்.