புதுச்சேரி-புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சி துறை அமைக்க வேண்டும் என முன்னாள் எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
காசி சங்கமத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரியின் கவர்னர், வில்லியனூரில் உள்ள திருக்காஞ்சி சென்று காசி தமிழ் சங்கமத்தை கொண்டாடினார்.
ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மொழியை வளர்ப்பதற்கென்று புதுச்சேரி அரசின் சார்பாக இதுவரை ஏன் தமிழ் வளர்ச்சித் துறை நிறுவப்படவில்லை என்பதை கவர்னர் யோசிக்கவில்லை.
இத்துறையை இங்கு ஆரம்பிப்பதற்கு நியாயமான பல காரணங்கள் இருக்கின்றன. நாம் தமிழை வளர்த்தெடுப்பதில் கடக்க வேண்டிய துாரம் நிறைய இருக்கிறது.
தமிழகத்தை போல புதுச்சேரியில் தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.
தமிழகத்தின் 39 எம்.பி.,களும், புதுச்சேரி எம்.பி.,யாக நானும் பாராளுமன்றத்தில் வாதாடியது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து மத்திய அரசால் அறிவிக்க உதவியது.
ஆனால் அதன் ஒரு சிறிய கிளையைக்கூட புதுச்சேரியில் நிறுவுவதற்கு இந்த அரசு முயற்சி எடுக்காதது வருத்தத்திற்குரியது. ஆனால் அதைவிட முக்கியமானது இன்று உள்ள சூழ்நிலையில் புதுச்சேரி அரசு உடனடியாக தமிழ் வளர்ச்சித் துறையை அமைக்க வேண்டும்.
காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடக்கும் இந்த ஒரு மாத காலகட்டத்தில் புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் துறை ஆரம்பித்தால் பிரதமரும் மகிழ்ச்சி அடைவார்.
வரும் 2023- 24ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்துறைக்கென போதுமான நிதி ஒதுக்க வேண்டும். புதுச்சேரியை சார்ந்த தமிழறிஞர்களில் சிறந்தவர், தமிழ் வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த துடிப்புள்ள ஒருவரை அதன் இயக்குனராக நியமித்து அவர் கீழ் பணியாற்ற ஆராய்ச்சியாளர்களையும், அலுவலர்களையும் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.