மூணாறு : மூணாறு அருகே காட்டு யானையிடம் சிக்கி கணவர் இறந்த நிலையில் இழப்பீட்டு தொகை, மகனுக்கு பணி ஆகியவற்றிற்காக தோட்டத் தொழிலாளியான மனைவி 18 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் நடையார் சவுத் டிவிஷனைச் சேர்ந்தவர் தேயிலைத் தோட்ட தொழிலாளி முத்துமாரி 55.
அவரது கணவர் வடிவேலு அதே எஸ்டேட்டில் ஐ.டி.டி. தேயிலை தொழிற்சாலை மேலாளர் பங்களாவில் செக்யூரிட்டியாக வேலை செய்தார்.
2004 ஜூன் 15ல் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது எதிர்பாராத வகையில் காட்டு யானையிடம் சிக்கி இறந்தார்.
அவரின் இறுதி சடங்குக்கிற்கு வனத்துறை ரூ.20 ஆயிரம் கொடுத்த நிலையில் இழப்பீட்டு தொகையும், மகனுக்கு பணியும் தருவதாக உறுதியளித்தனர். சம்பவம் நடந்தபோது மகன் ராதாகிருஷ்ணனுக்கு வயது 11. தற்போது அவரது வயது 39.எம்.சி.ஏ., முடித்துள்ளார்.
வனத்துறையினர் கூறியது போன்று இழப்பீட்டு தொகை, மகனுக்கு பணி வழங்கப்படவில்லை. கேரள முதல்வர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் முறையாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.
இழப்பீட்டு தொகை, பணி ஆகியவற்றிற்காக அரசு அலுவலகங்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை நாடி முத்துமாரி கடந்த 18 ஆண்டுகளாக போராடி வருகிறார்.