மதுரை :வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மதுரை மீனாட்சி கோயிலின் 4 சித்திரை வீதிகளில் வாரஇறுதி நாட்களில் 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பாரம்பரிய கிராமிய கலைவிழாவை மீண்டும் நடத்த வேண்டும் என கிராமிய கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஹிந்து அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை இணைந்து வெள்ளி, சனி, ஞாயிறு மாலை 6:00 மணி முதல் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, கோலாட்டம், ஒயிலாட்ட கலைஞர்கள் ஒருமணி நேர கலை நிகழ்ச்சிகளை நடத்தின.
கோயிலுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் மத்தியில் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. கலைஞர்களின் திறமையை கண்டு வியந்த வெளிநாட்டு பயணிகளும் வெளிநாடு வாழ் தமிழர்களும் தங்களது நாட்டுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பையும் வழங்கி வந்தனர். காலப்போக்கில் கலைவிழா நிறுத்தப்பட்டது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தானில் பாரம்பரிய இடங்களில் தினந்தோறும் இதுபோன்ற கலைவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
மதுரையில் சித்திரை வீதி மட்டுமின்றி திருமலை நாயக்கர் மகால், புதுமண்டபம், தெப்பக்குளத்திலும் கலைநிகழ்ச்சி நடத்தலாம். அறநிலையத்துறை, கலைபண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறைக்கு ஒரே செயலர் என்பதால் 3 துறைகளையும் ஒன்றிணைத்து செயல்படுத்துவதும் எளிது.
கரகாட்ட கலைஞர் சோமசுந்தரம் கூறியதாவது: மாநில கிராமிய கலைஞர்கள் மற்றும் கலைத்தொழிலாளர்களின் சங்க கூட்டமைப்பு மாநில தலைவராக உள்ளேன். 200 சங்கங்கள் இணைந்து செயல்படுகிறோம். 50ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், கணியன்கூத்து, வில்லுப்பாட்டு என வாரந்தோறும் நான்கு சித்திரை வீதிகளில் 52 வாரங்கள் தொடர்ந்து நடத்தியதால் எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் இதை செயல்படுத்தினால் எங்களைப் போன்ற கலைஞர்கள் மீண்டும் புத்துயிர் பெறமுடியும் என்றார்.