புதுச்சேரி-அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பான வழக்கில் புதுச்சேரி அரசிற்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராக காங்., காலத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் அனைவரது காலமும் முடிந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்க எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வு நடைமுறைகள் 16.7.2020 வரை நடந்து முடிந்தது. ஆனால், தேர்வு முடிவு வெளியிட காலதாமதம் ஆன நிலையில் கார்திகேயன்,பார்த்தீபன் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் கடந்த 8.8.2022 அன்று நீதிபதி கிருஷ்ணகுமார், மூன்று வாரத்தில் தகுதி பெற்றோர் பட்டியலை வெளியிட வேண்டும். அடுத்த இரண்டு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்க உத்தரவிட்டார். ஆனால் புதுச்சேரி அரசு அதன் முடிவை வெளியிடாமல் காலம் தாழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து மனுதாரர் கார்த்திகேயன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை செயலர் மற்றும் சட்டத்துறை செயலர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கு நேற்று நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன், ஒரு வாரம் கால அவகாசம் கோரினார்.
அதனை நிராகரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி அதை வரும் 25ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திட உத்தரவிட்டார்.
இதனால் புதுச்சேரியில் அரசு வழக்கறிஞர்களின் நியமன பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.