திருவாடானை : திருவாடானை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடம் சேதமடைந்துள்ளதால் உடல்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரிசோதனைக்கு தேவையான பொருட்களை நிர்வாகம் வழங்காத அவல நிலை தொடர்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையில் வளாகத்தில் ஒதுக்கு புறமான இடத்தில் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்கு உட்பட்ட கொலை, விபத்து, தற்கொலையால் இறந்தவர்களின் உடல்கள் இங்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜன்னல் கதவுகள் திறந்த வெளியாக உள்ளது. மாலை 5:00 மணிக்கு மேல் வரும் உடல்கள் மறுநாள் காலையில் பரிசோதனை செய்வதால் உடலை பாதுகாக்க குளிர்சாதன வசதியில்லை. இதனால் உடல்களை பாதுகாக்க முடியாததால் துர்நாற்றம் வீசுகிறது.
ஒரே நாளில் இரு உடல்கள் வந்தால் சிறிய அறையாக இருப்பதால் விரைவாக பரிசோதனை செய்ய முடியாத நிலை உள்ளது. அறையை சுற்றிலும் புதர் மண்டி இருப்பதால், எலி, பாம்பு தொல்லையும் உள்ளது. அழுகிய உடல்களை எலிகள் கடித்து குதறுவதாக புகார் எழுந்துள்ளது.
திருவாடானை மக்கள் கூறுகையில், பிரேத பரிசோதனைக்கு தேவையான துணிகள் முதல் அனைத்தையும் சம்பந்தப்பட்ட உடலுக்கு உரியவர்களே வாங்கி தரவேண்டிய நிலை உள்ளது. நிர்வாக தரப்பில் பிரேத பரிசோதனைக்கான பொருள்கள் எதும் தரப்படுவதில்லை. சட்டம் சார்ந்த மருத்துவ ஆய்விற்கு சடலங்களில் இருந்து உடல் உறுப்புகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பப்படும் விஸ்ரா பாட்டில்கள் கூட நிர்வாகம் தருவதில்லை, என்றனர்.