சிவகங்கை : முல்லை பெரியாறு ஒரு போக பாசன கால்வாயில் நீர் வரத்து இல்லாததால் 40 க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர்கிடைக்கவில்லை, என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். கடலுக்கு வீணாக செல்லும் நீரை சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்ககை எழுந்துஉள்ளது.
முல்லை பெரியாறு ஒரு போக சாகுபடியில் கடைமடைப்பகுதியாக சிவகங்கை மாவட்டம் உள்ளது. ஷீல்டு, லெசிஸ் 48 மடை, கட்டாணிப்பட்டி 1,2, ஆகிய கால்வாய்கள் வழியாக 6 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும் நீட்டிப்பு கால்வாய்களான மாணிக்கம் கால்வாய், சிங்கம்புணரி கால்வாய், மறவமங்கலம் கால்வாய் வழியாக 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும்.
ஷீல்டு, லெசிஸ் கால்வாய் மூலம் பாசனம் பெறக்கூடிய பகுதிகளில் 40 கண்மாய்கள் பயன்பெறவில்லை. நாலுகோட்டை, மேலப்பூங்குடி, சாலுார், வீரப்பட்டி, பெருமாள்பட்டி உட்பட 20 கண்மாய்களுக்கு பாசன நீர் வந்து சேரவில்லை.
லெசிஸ் கால்வாயில் இடையமேலுார், மங்காம்பட்டி, காஞ்சிரங்கால், புதுப்பட்டி, தேவனிப்பட்டி, குமாரபட்டி, தமறாக்கி ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நீர் வரத்தே இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
வைகை அணை நிரம்பி அங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் செல்லும் நீர் கடலுக்கு வீணாக செல்கிறது. முல்லை பெரியாறு ஒரு போக பாசனத்திற்கு செப்., 7 ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 120 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும்.
70 நாளில் கால்வாய்களில் நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வந்தால் மட்டுமே அனைத்து கண்மாய்களும் பயன் பெறும் வகையில் பாசன நீர் வழங்க முடியும். தற்போது கால்வாய்களில் வினாடிக்கு 10 கன அடிக்கும் குறைவாகவே திறக்கப்படுகிறது.
பொதுப்பணித்துறையினர் முறையாக பாசன நீரை திறந்து கால்வாய்களில் வினாடிக்கு 50 கன அடி நீர் வீதம் கொண்டு வந்தால் மட்டுமே கடைமடைப்பகுதி பாசனம் பெறும்.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.