திருபுவனை-தன்னை காதலிக்க மறுத்த கல்லுாரி மாணவியை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருபுவனை அடுத்த சன்னியாசிகுப்பம் காலனியை சேர்ந்தவர் நாகராஜன் மகள் கீர்த்தனா,18; கலித்தீர்த்தாள்குப்பம் அரசு கல்லுாரியில் பி.காம்., படித்து வந்தார். இவரை அதே காலனியை சேர்ந்த உறவினர் முகேஷ்,23; ஒருதலையாக காதலித்து வந்தார். அதனை கீர்த்தனா ஏற்கவில்லை,.
ஆனாலும் முகேஷ், கீர்த்தனாவை பின்தொடர்ந்து காதலிக்க மறுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2021 ஜூலை 19 ம் தேதி கல்லுாரியிலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பிய மாணவி கீர்த்தனா சன்னியாசி குப்பம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது பைக்கில் வந்த முகேஷ், கீர்த்தனாவை வழிமறித்து கத்தியால் சரமாரியாகவெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றார்.
இதுதொடர்பாக திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து முகேைஷ கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இவர் மீது, திருவாண்டார்கோவிலில் உள்ள மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் பரிந்துரையை ஏற்று, முகேைஷ குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை, காலாப்பட்டு சிறை கண்காணிப்பாளரிடம் திருபுவனை போலீசார் கொடுத்தனர்.