புதுச்சேரி போலீஸ் துறையில், தகவல் பரிமாற்றம் அனைத்தும் ஒயர்லெஸ் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, போலீஸ் ஸ்டேஷன்களிலும், போலீஸ் ரோந்து வாகனங்களில் 'ஸ்டேட்டிக்' எனப்படும் ஒயர்லெஸ் கருவிகள் பொருத்தப்படுகின்றன.
இதுமட்டுமின்றி அனலாக் தொழில்நுட்பத்துடன் கூடிய வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வாக்கி டாக்கிகளை ரோந்து செல்லும், சப் இன்ஸ்பெக்டர்கள், பீட் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். இவை, நகர பகுதியில் அவசரத்திற்கு கைகொடுத்தாலும், கிராமங்களில் சரிவர சிக்னல் கிடைப்பதில்லை என போலீசார் புகார் தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, புதுச்சேரி போலீஸ் துறையின் ஒயர்லெஸ் சேவையை அனலாக் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் மயமாக்க போலீஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.இத்திட்டத்திற்கு ரூ.6.44 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்தொகை கேட்டு, உள்துறை வாயிலாக மத்திய உள்துறைக்கு விரைவில் கோப்பு அனுப்பப்பட உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2017 ம் ஆண்டே அவசர உதவி ஆதரவு மையம் அமைக்கப்பட்டது.
இதற்காக மத்திய உள்துறை 3 கோடியே 23 லட்சத்து 41 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
அதில் ரூ.2 கோடியே 70 லட்சத்து 82 ஆயிரத்து 35 ரூபாய் அவசர கால உதவி மைய திட்டத்திற்கு செயல்படுத்தப்பட்டது.
மீதி 52 லட்சத்து 58 ஆயிரத்து 965 ரூபாய் இருந்ததால் முழுவதுமாக செயல்படுத்தப்படவில்லை. ஒயர்லெஸ் சேவையும் டிஜிட்டல் மையமாக்கப்படவில்லை.
இதனையடுத்து அவசரகால உதவி மைய திட்டத்தின் கீழ் மீண்டும் ரூ.6.44 கோடி தேவை என மதிப்பிட்டு போலீஸ் தலைமையகம், உள்துறைக்கு கோப்பு அனுப்பியுள்ளது.
அவசர எண்-112
ஆபத்து காலங்களில் போலீஸ் உதவியை நாட 100 என்ற தொலைபேசி எண்ணும், தீயணைப்பு துறைக்குக்கு-101, ஆம்புலன்ஸ்-108, பெண்கள் உதவி-1090 ஆகிய உதவிகள் உள்ளன.
இந்த உதவி எண்களை தொடர்பு கொள்ளாமல் 112 என்ற ஒற்றை எண்ணின் மூலம் அனைத்து உதவிகளையும் நொடியில் பெற முடியும்.
ஒயர்லெஸ் சேவையை டிஜிட்டல் மயமாக்கும்போது, ரோந்தில் இருக்கும் வாகனங்களுக்கு விரைவாகவும், துல்லியமாகவும் தகவல் பரிமாற்றம் இருக்கும்.
மேலும், வாக்கி டாக்கிகள் சிறப்பாக செயல்பட ரீப்பிட்டர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை.
எனவே ரீப்பிட்டர்கள் கூடுதல்இடங்களில் வைக்கவும், ரூ.4.30 கோடி செலவில் நவீன வாக்கி டாக்கிகள் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.