மதுரை : இமாச்சலில் நடந்த இரண்டு தேசிய வாலிபால் போட்டிகளில் தமிழக அணியில் பங்கேற்று வெற்றி பெற்ற மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவி பவித்ராவுக்கு மதுரை ரயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இக்கல்லூரியில் பி.ஏ., 2ம் ஆண்டு பயிலும் பவித்ரா இமாச்சல பிரதேசம், சிம்லாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான 'கேலோ இந்தியா' வாலிபால் போட்டிக்கு தமிழக அணி சார்பில் தேர்வாகினார்.
இதில் தமிழக அணி முதலிடம் பெற்றது. அடுத்து ஜம்மு காஷ்மீரில் நடந்த தேசிய ஜூனியர் வாலிபால் போட்டியில் தமிழக அணி வெண்கல பதக்கம் வென்றது.
இரண்டு போட்டிகளிலும் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உதவிய பவித்ராவை, வாலிபால் வீரர்கள் வரவேற்றனர். கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், பயிற்சியாளர் தீபன்ராஜ் பாராட்டினர்.
மீனாட்சி கல்லுாரி மாணவி
மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரியின் பி.ஏ., 2ம் ஆண்டு மாணவி சரண்யா தேசிய பார்வையற்றோர் சங்க தடகள போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றார்.
இந்திய பார்வையற்றோர் சங்கம் சார்பில் டில்லியில் டிச. 14 முதல் 16 வரை தேசிய தடகள போட்டிகள் நடக்க உள்ளது. இதில் 400 மீட்டர் ஓட்டம், ஈட்டி எறிதலில் பங்கேற்க, மாணவி சரண்யா தமிழக அளவில் தேர்வாகியுள்ளார்.
இவரை கல்லுாரி முதல்வர் வானதி, உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் பாராட்டினர்.