போடி : ராசிங்காபுரம் கவுண்டன்குளம் கண்மாயில் வருவாய்த்துறை ஆசியுடன் தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் மழை நீரை முழுவதும் தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், ராசிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுண்டன்குளம் கண்மாய் 26ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ராசிங்காபுரம், தேவாரம் சுத்துவாங்கி ஓடையில் இருந்து வரும் மழை நீர்இக்கண்மாயில் தேங்கும்.
இக்கண்மாயை நம்பி ராசிங்காபுரம், நாகலாபுரம், மல்லிங்காபுரம், கெஞ்சம்பட்டி, கரியப்ப கவுண்டன்பட்டி, ஜக்கம்மாள்புரம் பகுதி நிலங்கள் பயன்பெறும். கண்மாயின் பெரும்பகுதியை வருவாய் துறையினர் தனி நபர்களுக்கு தாரை வார்த்து கொடுத்ததால் தற்போது 15 ஏக்கராக சுருங்கியுள்ளது. ஆக்கிரமிப்பால் மழை காலங்களில் கண்மாயில் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கண்மாயை மீட்டு ஆக்கிரமிப்பு அகற்றி மழைநீர் முழுமையாக தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கருத்து
பழுதடைந்த ஷட்டர்
பி.ரவி, விவசாயி, ராசிங்காபுரம்: கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அருகே உள்ள நாகலாபுரம், மல்லிங்காபுரம், கெஞ்சம்பட்டி, ஜக்கம்மாள்புரம் விவசாயிகள் பயன் அடைவார்கள். தற்போது கண்மாய் கரை உயர்த்ததாலும், முட்செடிகள் வளர்ந்துள்ளதால் மழை நீரை தேக்க முடியாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஷட்டர் சேதமாகி தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் கண்மாயில் மழை நீரை முழுவதும் தேக்க முடியவில்லை. கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வாரி கரையை உயர்த்தி ஷட்டர் சீரமைப்பு செய்து மழைநீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் தாரை வார்த்த கண்மாய்
எம்.ராஜா, விவசாயி, ராசிங்காபுரம்: கவுண்டன்குளம் கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுவதோடு, 200 கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயன் அடைவார்கள். மழைநீர் கண்மாய் முமுவதும் தேங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு களஞ்சியம் விவசாயிகள் சங்கம் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் விவசாயிகள் பங்களிப்பு வழங்கி கண்மாயை தூர்வார முயற்சி செய்தும், முறையாக தூர்வாராததால் பயன் அளிக்கவில்லை. அதிகாரிகளின் ஆசியோடு கண்மாயில் இருந்த மரங்களை வெட்டியதோடு, கண்மாயின் ஒரு பகுதியை தனியாருக்கு தாரை வார்த்துள்ளனர்.
பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கண்மாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழைநீர் முழுவதையும் தேக்க முடியாமல் விவசாயிகள் தவிப்படைந்து வருகின்றோம்.
இக் கண்மாயை முறையாக சர்வே செய்து, மண் அள்ளும் இயந்திரம் மூலம் தூர்வாரி, தடுப்புச்சுவருடன் ஷட்டர் அமைத்து மழை நீர் முழுவதையும் தேக்கும் வகையில் செய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.