சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் சீரணி அரங்கை இடித்து விட்டு பேரூராட்சி கட்டடம் கட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இடம் தேர்வு நடக்கிறது.
சீரணி அரங்கை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டடம் கட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு கருத்து கேட்க அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜான்முகமது,துணைத் தலைவர் செந்தில் முன்னிலை வகித்தனர்.
அம்பலமுத்து பேசியதாவது:
அலுவலகம் கட்ட நகரில் தகுதியான இடம் கிடைக்காத நிலையில் சீரணி அரங்கை இடித்துவிட்டு கூடுதலாக 15 அடி மட்டும் சேர்த்து கட்டடம் கட்ட தீர்மானித்துஉள்ளோம்.
மீதமுள்ள காலியிடத்தில் சீரணி அரங்கம்கட்டப்பட்டு பயன்பாட்டில் தொடரும். இதனால் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளுக்கு பாதிப்பு வராது, என்றார்
கூட்டத்தில் பங்கேற்ற பலர் பேரூராட்சி அலுவலகம் தவிர்த்து வேறு வணிக நோக்கத்திற்கு அந்த இடத்தை பயன்படுத்தக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு தலைவர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
கூட்டத்தில் தி.மு.க., நகர செயலாளர் கதிர்வேல், அ.தி.மு.க., (இ.பி.எஸ்.,) நகர செயலாளர் வாசு, துணைச் செயலாளர் குணசேகரன், பா.ஜ., மாவட்டத்துணைத் தலைவர் கன்னையா, ஒன்றிய தலைவர் இளையராஜா, காங்., நகர தலைவர் தாயுமானவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்