ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயில் அருகே உள்ள குகை எதிரில் கோயில் நிர்வாகம் சார்பில் புதிய நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் சிறப்பு.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மாவூற்று வேலப்பர், மயில்வாகனம், கருப்பசாமி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் சில மாதத்திற்கு முன் நடந்தது. தற்போது ரூபாய் பல லட்சம் மதிப்பில் உபயதாரர்கள் மூலம் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. வேலப்பர் கோயில் அடியில் உள்ள குகை எதிரில் பல வகை பூச்செடிகள் சிறப்பு மலை வாழை கன்றுகள், மரக்கன்றுகள் நடப்பட்டு நந்தவனமாக பராமரிக்கப்படுகிறது.
சுவாமி பூஜைகளுக்குத் தேவையான பூக்கள், பழங்கள், இலைகள் அன்றாடம் நந்தவனத்தில் இருந்து சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோயில் செயல் அலுவலர் நதியா, ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்தனர்.