பழநி : பழநி நகராட்சி 4 வது வார்டில் கிணற்று நீர் மாசடைந்துள்ளதால் நிலத்தடி நீருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இவ்வார்டு மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
நேருஜி தெரு, பழனிசாமி வீதி, தண்டபாணி வீதி, கேப்டன் சுப்ரமணி வீதி, ஏ.சி.சி.ரோடு, கண்ணகி ரோடு, ஓம் சண்முக நகர், விநாயக மில் ரோடு பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குறுகிய சந்து, ரோடு அதிகம் உடையது.
நாய் தொல்லையும் மிக அதிகமாக உள்ளது. தாராபுரம் ரோட்டில் ரயில்வே மேம்பால பணிக்காக இப்பகுதி வீடுகள் இடிக்கப்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
குபேரப்பட்டணத்தில் உள்ள கிணற்றில் குப்பை, கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்க, அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
மர்ம நபர்கள் உலா
கோபிநாதன், நேருஜீ ரோடு, கடை உரிமையாளர்: தெருநாய் தொல்லை அதிகம் உள்ளது. எங்கள் பகுதியில் மர்ம நபர்கள் அதிகம் உலா வருகின்றனர். போலீஸ் ரோந்து பணி அதிகரிக்க வேண்டும். இங்குள்ள கண்காணிப்பு கேமராவும் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைக்க வேண்டும்.
பாலங்கள் இன்றி அவதி
லட்சுமி, சமுக ஆர்வலர், அங்கமுத்து வீதி: ஜீகா பைப் சில இடங்களில் அமைக்கப்படவில்லை. கண்காணிப்பு கேமரா பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும். சில இடங்களில் பாலங்கள் இல்லாமல் மக்கள் பாதிக்கின்றனர்.இங்கு பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய் தொற்றுக்கு வழி
பொன்னாத்தாள், குடும்ப தலைவி, அங்கமுத்து வீதி: அங்கன்வாடி மையத்திற்கு அருகே கிணறு உள்ளது. இதில் குப்பை அதிகம் சேர்ந்துள்ளது. இதனால் இப்பகுதியில் கொசு தொல்லையாலும்,சுகாதார சீர் கேடாலும் நோய் தொற்று அதிகம் ஏற்படுகிறது.
விரைவில் நடவடிக்கை
கலையரசி, கவுன்சிலர் (தி.மு.க.,): தெரு நாய்களை கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். வார்டில் சேதமடைந்துள்ள பாலம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலம் கட்டும் நிலையில் பல வீடுகள் பாதிக்கப்படும். இதுகுறித்து நகராட்சிக்கு எந்த தகவலும் வந்ததாக தெரியவில்லை.
இதற்கு பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் மூலம் தீர்வு காண முயற்சி செய்வேன்.
அங்கன்வாடி அருகே உள்ள கிணற்று நீர் மாசடைந்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜீகா பைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரோந்து பணி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவை விரைவில் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளேன்,என்றார்.